ஐக்கிய நாடுகள் சபையின் வாசல் வரை எமது உரிமை போராட்டத்தை கொண்டு சென்றுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
“தமிழ் தேசிய கூட்டமைப்பின் பயணமென்பது அபிவிருத்திக்கான பயணமல்ல நாங்கள் அபிலாசைக்கான பயணமொன்றை மேற்கொள்கிறோம். அந்த இலக்கை நோக்கி நாங்கள் சர்வதேச ரீதியிலான அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.
இலங்கையில் இருக்கக் கூடிய சிறுபாண்மை மக்கள் வடக்கு கிழக்கிலே வாழக்கூடிய மக்கள் நிரந்தரமாக அரசியல் உரிமை கொண்டவர்களாக சுதந்திரமாக வாழக் கூடிய இறுதி முடிவைப் பெற்றுக் கொள்ளும் ஒரு போராட்டத்தை நாங்கள் நடாத்திக் கொண்டிருக்கிறோம்.
எதிர்வரும் காலங்கள் எமது போராட்டத்தின் இலக்குகளை அடைகின்ற காலமாக இருக்கிறது. போருக்கு பின்னர் வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற தமிழர்கள் யாருக்குப் பின்னால் நிற்கின்றார்கள் என சர்வதேசத்துக்கு காட்டுவதற்காக தேர்தலில் தமிழ் மக்கள் நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வாக்களிக்க வேண்டும்.
2009 ஆண்டுக்குப் பின்னர் கட்டம் கட்டமாக நடைபெற்ற 8 தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிகபடியான வாக்குகள் வழங்கியுள்ளீர்கள். அதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்திலே ஐக்கிய நாடுகள் சபையின் வாசல் வரை எமது உரிமைப் போராட்டத்தைக் கொண்டு சென்றுள்ளோம்.
ஆனால் நாங்கள் இன்னும் உள்ளே செல்லவில்லை நாங்கள் உள்ளே செல்வதற்கு எதிர்வருகின்ற தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வைப்பீர்களாகவிருந்தால் ஐக்கிய நாடுகள் சபையில் எமது மக்களுக்கான தீர்வை முன்வைப்பதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படும்.
இந்த தீர்வு என்பது தான் மூலம் இந்த மண்ணிலே நடந்த அகிம்சை ரீதியான ஆயுத ரீதியான போராட்டங்களுக்கு பிற்பாடு இப்போது இராஜதந்திர ரீதியாக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் மூலம் எமது இறுதி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
புதிதாக அமையப்போகும் அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பலமான சக்தியாக செல்லுமானால் நாங்கள் 65 வருட காலமாக இழந்த இழப்புக்கு ஒரு பலன் கிடைக்கவிருக்கிறது.
அதற்காக தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாத்திரம் வாக்களித்து கட்சியை பலப்படுத்த வேண்டும். புதிய ஜனாதிபதி வந்திருக்கிறார் தமிழர்கள் அவரை ஆதரிக்கிறார்களா? அல்லது பிரதமரை ஆதரிக்கிறார்களா?
அல்லது நாங்கள் தமிழர்கள் தனித்துவமான இனம் எங்கள் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கிறார்களா? என சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
2004ம் ஆண்டு 22 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றம் சென்று 2010 ஆண்டு 14 ஆக குறைந்துள்ளது இம்முறை நாங்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.
பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும். தமிழர்கள் தனித்துவமானவர்கள் எவருக்கும் சோரம் போகாதவர்கள் கடந்த 65 வருடங்களாக உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.
போராட்ட வடுக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற இனம் ஆனால் எந்த சூழ்நிலையிலும் இலக்கை தவறவிடமாட்டோம் என்று இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூற வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 30 சுயேட்சைக் குழுக்கள் உட்பட 46 கட்சிகள் போட்டியிடுகின்றன. இவற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகள் போட்டியிட்டு வெற்றியீட்டக் கூடிய கட்சிகளாக இனங்காணப்பட்டுள்ளன.
இந்த நான்கு கட்சிகளில் ஐக்கிய தேசிய கட்சியில் தலைமை வேட்பாளராக ஓட்டமாவடியைச் சேர்ந்த அமீர் அலியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் காத்தான்குடியைச் சேர்ந்த ஹிஸ்புல்லாவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் அலிஸாஹிர் மௌலானவும் போட்டியிடுகிறார்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை அவர்களின் இனத்துக்கான தனித்துவமான கட்சி அவர்கள் வாக்களிப்பார்கள். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் தலா ஐந்து தமிழர்கள் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் அக்கட்சியில் போட்டியிடும் முஸ்லிம்களுக்கு தமிழ் மக்களது வாக்குகளை சேகரித்துக் கொடுக்கும் முகவர்களாக செயற்படுகிறார்கள். இவ்வாறு எமது வாக்குகள் சிதறும் போது 75 சதவீதம் வாழுகின்ற தமிழர்கள் இருக்கும் போது 24 சதவீதம் இருக்கின்ற முஸ்லிம்கள் இருவர் நாடாளுமன்றம் செல்வார்கள்.
எங்களது ஆசனங்கள் குறைவடைய வாய்ப்பு ஏற்படும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 4226 வாக்குகள் குறைவடைந்திருந்ததால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு முஸ்லிம்களும் ஒரு தமிழனுமே நாடாளுமன்றம் சென்றிருப்போம் இந்த விடயத்தில் எமது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்
1 Comments:
http://www.eluvannews.com/2015/07/blog-post_62.html?m=1
கடவுள் காக்க மட்டடக்களப்பை. இவரின் பேச்சு முழுவதும் தான் எப்படி கஷ்டடப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதுதான். மக்களின் வாழ்க்கைக்கு எப்படி தான் அரசியலில் மூலம் உதவி செய்தார் என்பதோ, அல்லது என்ன அபிவிருத்தி செய்தார் என்பதோ இல்லை. மக்களுக்கு விளையாட்டு கேடயங்களை கொடுத்து மக்களை இம்முறையும் ஏமாற்ற முடியாது. பிச்சை காரனுக்கு பிச்சை போடுவதுபோல் தேர்தல் காலத்தில் கேவலமான அன்பளிபை தந்து இனிமேல் எம்மை ஏமாற்ற முடியாது. போர் முடிந்த நிலையில் ரணில் இனப்பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறிய பின் ஏதோ இவர்கள் தீர்வு தருவது போல, நீ சேகரித்த பணம் எவ்வளவு என்று மக்களுக்கு தெரியுமா?
தோல்வி கண்முன் தெரிந்தால் கட்சிக்கு மட்டும் வாக்கு கேட்பதா? மக்களுக்கு கல்வியை வழங்கி உதவி செய்தால் படித்ததன் பின் சிந்திக்கத்தொடங்கி உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயத்தில் ஆடுகின்ற அரசியல் நாடகம். வைப்போம் அதற்கு முற்றுப்புள்ளி. படிப்பறிவள்ள நாம் இம்முறை அபிவிருத்தியின் நாயகன் கணேசமூர்த்தி ஐயாவைத்தான் வெல்ல வைப்போம். சாதாரண வெற்றி என்று நினைக்காதீர்கள் அமோகவெற்றி. தமிழருக்கு அரசியல் தீர்வு பெற்றுத்தந்தது மட்டக்களப்பின் மைந்தன் என்ற பெருமையை நாம் எடுக்க வேண்டும்.
Post a Comment