நாட்டில் உறுதியான ஸ்த்திரம்மிக்க ஆட்சியை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பில் வைத்து நேற்று (21) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் கூறியதாவது,
இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தியின் பால் கொண்டு செல்ல உறுதிமிக்க அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
மட்டக்களப்பின் கிராமிய பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்து கைத்தொழிலில் மாற்றத்தினை ஏற்படுத்தி மட்டக்களப்பில் பாரிய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவிருக்கின்றோம்.
கிராமத்திற்கு நகரம் எனும் வேலைத் திட்டத்தினையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் 30,000 கிராமங்களையும், 20,000 சிறிய கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் உள்ளக கட்டமைப்பு அபிவிருத்தி கிராமிய மக்களின் வாழ்வாதாரம் இவற்றையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம்.
சிறிய நீர்ப்பாசனத் திட்டத்தினை அபிவிருத்தி செய்து விவசாயத்தை ஊக்கப்படுத்தவுள்ளோம்.
நெற்களஞ்சிய சாலைகளை ஏற்படுத்துவதுடன் மீனவர்களுக்கு தமது மீன்களை வைக்க கூடியதான குளிரூட்டிகளையும் பிரதேசங்கள் தோறும் அமைக்கவிருக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதியில்லாதவர்களுக்கு காணி ஒப்பங்களை வழங்குவதுடன் ஒரு வருடம் காணியில் வசிப்போருக்கு அல்லது விவசாயம் செய்வோருக்கு அந்தக் காணிகளை சொந்தமாக வழங்கவுள்ளோம்.
மகாவலி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8000 எக்கர் ஹெக்ரயர் விவசாய காணிகளுக்கு நீர்ப்பாசானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் திருமலை மாவட்டத்திலும் 10000 ஏக்கர் விவசாயக் காணிகளுக்கு இத் திட்டத்தின் கீழ் நீர்ப்பாசனத்தை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேபோன்று மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, திருகோணமலை, ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பொருளாதார வலயத்தினை அமைக்கவுள்ளோம்.
இவ்வாறான அபிவிருத்தி வேலைகளை செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
கடந்த பத்து வருடங்களாக மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய குடும்பமும் ஆட்சி செய்தது.
எதிர்காலத்தை கருத்திற் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
1 Comments:
கணேசமூர்த்தி ஐயாவுக்குத்தான் எங்கள் வாக்கு, மட்டக்களப்பு தமிழர்களின் ஒரு முடிவான தீர்பபு, நாம் அளிப்போம் வாக்கு யானாக்கும் இலக்கம் 8க்கும்
Post a Comment