23 Jul 2015

மக்கள் அளிக்கும் அனைத்து வாக்குகளும் செல்லுபடியானதாக அமைந்தாலே கூட்டமைப்பு பாரிய வெற்றி பெறும்- அமைச்சர்.துரைராசசிங்கம்

SHARE

எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் அளிக்கும் வாக்குகளில் செல்லுபடியற்றதாக அமையும் வாக்குகளை செல்லபடியான வாக்குகளாக மாற்றுவதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மிக முக்கிய விடயமாகும். அவ்வாறு இடம்பெறுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய வெற்றியை ஈட்டும் என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
புதன் கிழமை (22) மட்டக்களப்பு காரியாலயத்தில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இளைஞர் அணி உறுப்பினர்களுடனான தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்போதைய இந்த தேர்தல் சூழல் மிகவும் போட்டி மிக்கதாக அமைந்துள்ளது. இதில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதில் முற்றுமுழுதாக ஈடுபடும் எமது கட்சி பல சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டி இருக்கின்றது. எமது நோக்கம் இந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வெற்றி பெறச் செய்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய அடுத்த கட்டத்தினை எட்டுவதற்கான ஆணையினை மக்களிடம் இருந்து நாம் மீண்டும் பெறுவதாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஒரு மாற்றத்தின் விளைவாக எமது பிரச்சினைகளை செவிமடுக்கும் ஓர் அரசாங்கம் உருவாக்கப்பட்டு அதன் நிலைத்திருப்பு தொடர்பில் தற்போது மீண்டும் ஒரு பலப்பரீட்சை இடம்பெறுகின்றது. இதில் எமது பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருவாரியான வெற்றிதான் வருகின்ற அரசுடன் பேரம்பேசும் சக்தியாக எம்மை மாற்ற வல்லதாக அமையும்.

தற்போதைய சூழ்நிலையில் நாம் தொடர்ந்த உத்வேகத்துடன் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம் நாம் எமது மக்களிடம் இருந்து ஆணையைப் பெற முனைபவர்கள் ஒவ்வொருவரும் களத்தில் இறங்கிச் செயற்பட வேண்டும். எமது மக்கள் எப்போதும் எமக்கு ஆணையை வழங்கிக் கொண்டே இருக்கின்றார்கள் ஆனால் அவர்களின் வாக்குகள் வீணாக நிராகரிக்கப்படும் வாக்குகளாக மாறுகின்றன அவற்றை மாற்றி அந்த வாக்குகளை செல்லுபடியுள்ள வாக்குகளாக மாற்றினாலே போதும் எமது கட்சி பெருவாரியான வெற்றியைப் இதுவே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய விடயமாகும். அதற்காக எமது மக்கள் மத்தியில் சென்று வாக்குப் பதிவு தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் ஒவ்வொரு இளைஞர்களும் எமது மக்கள் மத்தியில் வாக்குப் பதிவு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி எமது கட்சி தொடர்பிலும் எமது கட்சியின் நோக்கம் பற்றியும் அவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

எமது மக்களுக்கு வாக்குப் பதிவு மேற்கொள்ளத் தெரியாவிடின் எதுவித தயக்கமும் கொள்ளத் தேவையில்லை. வாக்குச் சாவடிகளில் இருக்கும் அதிகாரிகளிடம் தெரிவித்து அவர்கள் மூலம் வாக்குப் பதிவினை மேற்கொண்டு அதனை மீண்டும் சரியாக கூறிய இடத்தில் பதிவிடப்பட்டுள்ளதா என பரிசீலித்து வாக்குப் பெட்டியினுள் இடுவதன் மூலம் நாம் வழங்கும் வாக்குகள் நிராகரிப்புக்கு உள்ளாவதைத் தடுத்துக் கொள்ள முடியும் என்பதையும் நாம் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். வாக்குப் பதிவதற்கு தெரியவில்லையே என பின்நிற்கும் மக்களுக்கு இவ்வாறான தெளிவுறுத்தல்களை நாம் வழங்க வேண்டும்.

எமது மக்களின் வாக்குகள் நிராகரிக்கபடுகின்றமை எமது ஜனநாயகப் பலம் குறைக்கப்படுவதற்கு சமமான விடயம் இதனை நிவர்த்தி செய்ய வேண்டியது கட்சி ஆதரவாளர்களினதும் உறுப்பினர்களினதும் பாரிய பொறுப்பு. இனியும் இவ்வாறான நிலைகள் தோன்றுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. இம்முறை எமது மக்களால் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்படுகின்ற எந்தவொரு வாக்கும் நிராகரிக்கப்பட்ட வாக்காக மாறக் கூடாது என்பதில் அனைவரும் திடமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: