19 Feb 2015

முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்த சட்டமூலம் குறித்து உலமா கட்சி

SHARE
முஸ்லிம் சமூகத்தின் பார்வைக்கு முன்வைக்காமல் முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்த சட்டமூலத்தை அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது, தனக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உலமா கட்சித் தலைவர் கலாநிதி மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு உலமா கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

நடைமுறையிலிருக்கும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக, கடந்த காலத்தில் நீதி அமைச்சினால் முஸ்லிம் புத்திஜீவிகளிடம் கருத்துக்கள் கோரப்பட்டிருந்தன.

இதன்படி கொழும்பு வை எம் எம் ஏயினால் பல நாட்கள் நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் திருத்தப்பட வேண்டிய விடயங்களையும், திருத்தப்பட வேண்டும் என சிலரால் விடுக்கப்படும் விடயங்கள் திருத்தப்பட வேண்டியதில்லை என்பதையும் நாம் விளக்கியிருந்தோம்.

அத்துடன் விவாக விவாகரத்து பதிவாளர் மற்றும் காதி நீதிவான் நியமனத்தின் போது, பல்கலைக்கழக பட்டம் பெற்ற மௌலவிமாருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தோம்.

எம்மால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகள் உள்வாங்கப்படும் என எமக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் திருத்தப்பட்ட சட்டத்தின் பிரதி எமக்கு இதுவரை கிடைக்காததால் எவை திருத்தப்பட்டன என்பது பற்றி எமக்கோ முஸ்லிம் சகத்துக்கோ இதுவரை தெரிவிக்கப்படாமல் இருப்பதன் காரணமாக இதில் மார்க்கத்துக்கு முரணான சில விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எமக்குள்ளது.

இது விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நீதிஅமைச்சராக கடமை புரிந்தவர்கள் சரியான முறையில் நடந்து கொண்டதாகவும் எமக்குத் தெரியவில்லை.

ஆகவே மேற்படி சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அதனை சட்டமாக்குவதற்கு முன் அதன் முழுமையான பிரதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் முஸ்லிம் உலமா கட்சிக்கும் அனுப்பப்பட்டு அவற்றின் ஒப்புதல் பெறப்பட்டபின்பே பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும்படி உலமா கட்சி நீதி அமைச்சரை கேட்டுக்கொள்கிறது, என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ad)
SHARE

Author: verified_user

0 Comments: