19 Jan 2015

ஒருநாள் சர்வதேச போட்டியில் வேகமான சதம் - வில்லியர்ஸ் சாதனை

SHARE
தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி ஜொஹனர்ஸ் போர்க்கில் நேற்று (18) இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கியது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்த நிலையில் 439 பெற்றது. இதன்போது ஏ பி டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்து, சர்வதேச ஒருநாள் போட்டியில் வேகமாக சதத்தை பெற்றவர் என்ற உலக சாதனையை நிலைநாட்டினார்.

அதே போன்று நேற்றைய போட்டியில் 16 பந்துகளுக்கு வில்லியர்ஸ் தனது அரைச்சதத்தை கடந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.  ஆனால் அதை ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முறியடித்து விட்டார் வில்லியர்ஸ்.

இது 95/96 ஆம் ஆண்டுகளில் இலங்கை அணியின் அதிரடி வீரர் சனத் ஜயசூரியவினால் நிகழ்த்தப்பட்ட சாதனையையும் முறியடித்ததது. மேலும் ஒரு போட்டியில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்றவர் என்ற என்ற சாதனையையும் நேற்றைய தினம் ஏ பி டி சமப்படுத்தினார். அவர் நேற்றைய போட்டியில் 16 ஆறு ஓட்டங்களை விலாசி இருந்தார்.

இறுதியாக அவர் 44 பந்துகளில் 149 ஓட்டங்களை பெற்றதுடன், ஹசிம் அம்லா ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை பெற்றார். அத்துடன், ரூசோவ் 128 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். தென்னாபிரிக்க அணி நேற்றைய போட்டியில் பெற்றுக்கொண்ட 439 ஓட்டங்களானது சர்வதேச ஒரு நாள் போட்டி ஒன்றில் அணி ஒன்று பெற்றுக்கொண்ட அதிகூடிய இரண்டாவது ஓட்ட எண்ணிக்கையாகும். இலங்கை அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக பெற்ற 443 ஓட்டங்கள் பெற்றமையே அதிகூடிய ஒரு நாள் ஓட்டங்கள் என்ற சாதனையாக உள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளில் இருந்து 291 ஓட்டங்களை பெற்று 148 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
SHARE

Author: verified_user

0 Comments: