10 Jan 2015

மைத்திரிபால சிறிசேன வெற்றி - தமிழக அரசியல்வாதிகளின் கருத்துக்கள்

SHARE
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றமை தொடர்பில் தமிழக அரசியல் பிரமுகர்கள் வௌியிட்டுள்ள கருத்துக்கள்,

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,

‘என்றாவது ஒருநாள் அறம் வெல்லும், அநீதி அழியும்’ என்பதே, தொன்றுதொட்டு வரும் தமிழர்களின் நம்பிக்கை. அக்கூற்றினை மெய்ப்பிக்கின்ற வகையில், மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில், தமிழர் தாயகத்தில், குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளில், மஹிந்த ராஜபக்ஷ படுதோல்வி அடைந்துள்ளார்.

மேலும் இஸ்லாமியப் பெருமக்கள் நிறைந்து வாழும் மூதூர் பகுதியில், அவருக்கு 7,000 வாக்குகளும், எதிர் வேட்பாளருக்கு 57,000 வாக்குகளையும் அளித்து உள்ளனர்.

இத்தேர்தல் களத்தில் ஜனாதிபதியாக வெற்றி பெற்று இருக்கின்ற மைத்திரிபால சிறிசேன, ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கி விடுவார் என்று எவரும் எதிர்பார்த்து ஏமாந்து விட வேண்டாம். ஆனால், இந்தத் தேர்தல் முடிவால் ஒரு நன்மை விளைந்து இருக்கின்றது.

‘ஈழத்தமிழர்கள் கொதித்து எழுந்து எதிர்ப்பைக் காட்டினர்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கின்றன. மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்களின் வாக்குகள் தான் என்பதை மறுக்க முடியாது.

2005 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த வெற்றி பெறுவதற்கு மறைமுக காரணமாக இருந்தவர்கள் தமிழர்கள் தான். அத்தேர்தலை தமிழர்கள் புறக்கணித்ததால் தான் ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்தி, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக முடிந்தது.

தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன்,

இலங்கையின் புதிய அரச தலைவராக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்க இருக்கிறார். ஈழத் தமிழர் வாக்குகளால் மட்டுமே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் அவர், ராஜபக்ஷ வழியில் செல்லாமல் தமிழரின் நியாயமான அரசியல் விருப்பங்களை மதித்து நடக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழினம் ஒன்று திரண்டு தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்தும் மதித்தும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஆக்கிரமித்து நிற்கும் இராணுவத்தினரை விலக்க வேண்டும்.

தமிழினப் படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணைக் குழுவை அனுமதித்து தமக்கு வாக்களித்த தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு மைத்திரிபால சிறிசேன முன்வர வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: