2 Jan 2015

சீனாவில் புத்தாண்டுக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு

SHARE
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 48 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிலர் கூட்டத்தில் போலி நாணய தாள்களை அள்ளி வீசியுள்ளனர். அதே சமயத்தில் நாணயத்தாள்களை பொறுக்கியெடுக்க கூட்டம் முண்டியடித்த போதே இந்த விபரீதம் நேர்ந்துள்ளது. சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காயின் மத்திய பகுதியில் பண்ட் என்ற சுற்றுலா தலம் அமைந்துள்ளது. நதிக்கரையோரம் அமைந்துள்ள அப்பகுதியில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 2015 ஆம் ஆண்டுப் புத்தாண்டை வரவேற்க கடந்த 31 ஆம் திகதி நள்ளிரவில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்திருந்தனர். புத்தாண்டு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னால் சிலர் போலி நாணயத்தாள்களை ஒரு கட்டிடத்தில் இருந்து அள்ளி வீசியுள்ளனர்.

காற்றில் பறந்து சிதறிய அந்த நாணயத்தாள்களை பொறுக்குவதற்காக கூட்டத்தினர் முண்டியடித்தனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 25 பேர் பெண்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவ, மாணவியர் ஆவர். மேலும் 48 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உயர் நிலை விசாரணை நடத்த சீன அரசு உத்தரவிட்டுள்ளது.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: