19 Dec 2014

இன,மத குழுக்கள் திரைப்படங்களில் திருத்தம் கோருவது தவறு

SHARE
இன,மத ரீதியான உணர்வுகளுக்கு பாதிப்புக்களை உண்டாக்குவதாகக் காரணம் கூறி, தணிக்கத்துறை அதிகாரிகளால் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களிலிருந்து வசனங்களையும், காட்சிகளையும் படங்களின் தலைப்புகளையும் அகற்றக்கோருவது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சகிப்புத்தன்மை இல்லாத குழுக்களினதும் அமைப்புகளினதும் செயல்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அப்படி அனுமதி வழங்கப்படும் சூழல் நிலவினால், அது சட்டவிதிகளையும், ஆட்சி முறையையும் சரணடையச் செய்வதாக அமைந்துவிடும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

லைக்கா என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், தங்களது நிறுவனத்தின் பெயரை திரைப்படத்திலும், விளம்பரங்களிலும் பயன்படுத்திக்கொள்ள பாதுக்காப்பு கோரும் மனு மீதான விசாரணையின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியம் அமர்வு முன்பாக நடைபெற்ற இந்த விசாரணையில், பல்வேறு காரணங்களைக் கூறி மிரட்டும் குழுக்களையும் அமைப்புகளையும் காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்தோடு மிரட்டும் குழுக்களும் அமைப்புகளும் மேம்பட்ட தணிக்கை குழுக்களாக செயல்படும் நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் நீதிபதி ராமசுப்ரமணியம் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்தக் கருத்தை வரவேற்றுள்ள திரைப்பட நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், தணிக்கை முறைமையில் வேண்டுமானால் மேலும் கடுமையான விதிகளைக் கொண்டுவரலாம் என்று பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

ஆனால், படத்தை திரையிட முன்னதாக தனி அமைப்புகளுக்கும் நபர்களுக்கும் காண்பிக்க வேண்டும் என்று கோருவது முறையல்ல என்றும் தெரிவித்தார்.

ஆனால், 'அரசின் தணிக்கை அதிகாரிகள் பக்கச்சார்பற்ற முறையிலும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயற்பட்டால் உயர்நீதிமன்றத்தின் கருத்து ஏற்புடையதாக இருக்கும்' என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா தமிழோசையிடம் கூறினார்.
இதேவேளை, தணிக்கை அதிகாரிகள் சான்றிதழ் அளித்ததன் பின்னர், அதனை மீளப்பறிப்பதற்கு அரசாங்கத்திற்கே உரிமை கிடையாது என்று தணிக்கை குழுவின் சென்னை பிராந்திய அதிகாரி வி.பக்கிரிசாமி தெரிவித்தார்.(bb)

SHARE

Author: verified_user

0 Comments: