29 Dec 2014

வெள்ளத்தினால் திருமலையில் 31,782 குடும்பங்கள் பாதிப்பு!

SHARE
கடந்த சில தினங்களகளாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரி. திஸ்ஸ ரஞ்சித் டி சில்வா நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலவரங்களை அவதானித்தார். பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் சமைத்த உணவுகள் வழங்கப்படுவதுடன் தேவையான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.அத்துடன் நேற்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பிரதேசங்களுக்கிடையே படகு சேவை மேற்கொள்ளல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளல் உட்பட பல விடயங்களும் இதன்போது கவனத்திற்கொள்ளப்பட்டன.

திருமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா, உதவி அரசாங்க அதிபர் பாத்திய விஜயந்த, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர், மாவட்டத்தில் உள்ள முப்படை அதிகாரிகள் , பொலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இன்று (2014.12.29) காலை 7 மணிவரையிலான காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் 31,782 குடும்பங்களைச்சேர்ந்த 11,2853 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்தம் காரணமாக 03 பேர் பலியாகியுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்தவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் விராஜ் திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் 17 வீடுகள் முற்றாகவும் 352 வீடுகள் பகுதியளவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக 56 இடைத்தங்கல் முகாம்களும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6033 குடும்பங்களைச்சேர்ந்த 21,281 பேர் இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு தேவையான சகல வசதிகளும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரி. திஸ்ஸ ரஞ்சித் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் வழங்கப்பட்டு வருவதாக உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கந்தளாய் - சேருவில பாதை கடந்த 20 ம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதுடன் திருகோணமலை – மட்டக்களப்பு போக்குவரத்துப் பாதையும் வெள்ளம் காரணமாக தடைப்பட்டுள்ளது. அத்துடன் கிண்ணியா,மூதூர், வெருகல், சேருவில ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் பொதுமக்கள் நலன் கருதி படகு சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் இதனை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மாவிலாறு நீர் மட்டம் உயர்ந்துள்ளதனால் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு அவதான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: