15 Dec 2014

"இவ்வாண்டில் மட்டும் 15 மில்லியன் குழந்தைகள் வன்முறைகளால் பாதிப்பு" - யுனிசெப்

SHARE
உலகம் முழுவதும் இவ்வாண்டில் (2014 ஆம் ஆண்டு)  மட்டும்  பல்வேறு வன்முறை சம்பவங்களால் 15 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (UNICEF) அறிவித்துள்ளது.

சிறுவர்கள் குழந்தைகள் பற்றி கருத்து வெளியிட்ட யுனிசெப் கடந்த 08 ஆம் திகதி கருத்து தெரிவிக்கையில் திகில், பயம் விரக்தி மற்றும் அனைத்து நாடுகளிலும் தொடர்ந்து நிலவிவரும் மோசமான தாக்குதல் மோதல்களின் நிமித்தமே குழந்தைகள் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது மத்திய ஆபிரிக்க குடியரசு, ஈராக், தென் சூடான், சிரியா, உக்ரைன் நாடுகளில் நடைபெற்ற பல்வேறு வன்முறை சம்பங்களால் பல மில்லியன் குழந்தைகள் தங்கள் நாடுகளை இழந்து அகதிகளாக வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் 230 மில்லியன் சிறுவர்கள் ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டு  தொடர்ந்தும் வாழ்ந்து வருகிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

'இந்த 2014 ஆம் ஆண்டானது மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு மிகுந்த அழிவு மிக்க நாடாகுமென' யுனிசெப் நிறுவன நிர்வாகப் பணிப்பாளர் அந்தோனி லேக் தெரிவித்துள்ளார். குழந்தைகள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் வேளையில், இரவு படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடத்தப்பட்டுள்ளனர், அநாதைகளாக்கப்பட்டுள்ளனர், சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டுள்ளனர், பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளனர், தொழிலாளிகளாக விற்கப்பட்டுள்ளனர் அத்துடன் பல வகையான மிருகத்தனமான சொல்லொணாத்துயரங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 68 மில்லியன் குழந்தைகள் போலியா நோயால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தென்சூடானில் ஐந்து வயதுக்குட்பட்ட 235,000 குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 750,000 சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், 320,000 க்கும் மேற்பட்டோர் இன்றும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் 600 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 பேர் உறுப்புக்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது பரவி வரும் எபோலாவினாலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் மேற்கு ஆபிரிக்காவில் உயிரிழந்து வருகின்றனர்.  மொத்தத்தில் 2014 ஆம் ஆண்டை குழந்தைகளுக்கு எதிரான ஆண்டாக இருந்ததாக ஐநாவின் சிறுவர் நிதியம் அறிவித்துள்ளது.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: