(சக்தி)
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கெவிளியாமடு பகுதி காணி பிரச்சனை சம்பந்தமாகவும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் இடமாற்றம் சம்பந்தமாகவும் தடுத்து நிறுத்துமாறி கோரி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று நேற்று (12)புதன்கிழமை கையளிக்கப்பட்டது.
அம்மகஜரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், பிரசன்னா இந்திரகுமார், கி.துiராசசிங்கம், மா.நடராசா, கோ.கருணாகரன், ஞா.கிருஷ்ணப்பிள்ளை ஆகியோர் கையொப்பமிட்டு வழங்கியுள்ளனர்.
அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது!
கடந்த 2014.03.04ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பௌத்த பிக்குவின் உதவியுடன் சில சிங்கள மக்களையும் அழைத்துக் கொண்டு கெவிளியாமடு தொடர்பாகவும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் தொடர்பாகவும் ஒர் கவன ஈர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
அதில் தாங்கள் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் கெவிளியாமடு பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள வெளிமாவட்ட சிங்கள மக்களுக்கு அனுமதிப் பத்திரமும், வீட்டுத் திட்டமும், வதிவிடச் சான்றிதழும் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பிரதேச செயலளரான திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் என்பவரை இடமாற்றம் செய்வதாகவும் சம்பந்தப்பட்ட பௌத்த பிக்கு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது உண்மையாயின் நாங்கள் கவலையடைவதுடன், எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துமீறி குடியேறியுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்துவதுடன், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளரை காரணமின்றி முறைகேடாக இடமாற்றம் செய்ய வேண்டாம் எனவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். என அதில்; குறிப்பிடப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment