17 Jan 2024

மஹிந்த இராஜபக்ஸவுடன் பேசி ஜனாதிபதி வேட்பாளரைக் கொண்டு வருவதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை ஜனா எம்.பி.

SHARE

மஹிந்த இராஜபக்ஸவுடன் பேசி ஜனாதிபதி வேட்பாளரைக் கொண்டு வருவதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை ஜனா எம்.பி.

முன்னாள் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விரும்பும் ஒரு வேட்பாளரை நிறுத்துவோம் எனக் கூறியிருக்கின்றார். ஆனால் அவர் 2009 இலே ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்படும்போது ஒருஇலெட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும். ஆயிரக்கணக்கான போராளிகளையும், சர்வதேசத்தின் துணைகொண்டு அழித்த ஜனாதிபதிதான் அவர்.

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை 13 வது திருத்தச் சட்டத்திற்கு மேலே 13 பிளஸ் பிளஸ் கொடுப்பேன் என சர்வதேசத்திற்கு ஒரு உத்தரவாத்தத்தைக் கூறி எமது மக்களையும் போராட்டத்தையும் அழித்தார். 2009 இற்குப் பின்னர் தமிழ் மக்களின் முக்கியமான பிரதி நிதித்துவத்தைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகளைச் செய்து, இறுதியில் ஏமாற்றிய மஹிந்த இராஜபக்ஸ மீண்டும் தமிழ் மக்களுடன் பேசி ஒரு ஜனாதிபதி வேட்பாளரைக் கொண்டு வருவேன் என அவர் கூறினாலும், தமிழ் மக்களோ தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ மேற்கொண்டு அவருடன் இணைந்து ஒரு ஆட்சியை ஏற்படுத்துவதற்கு, நாங்கள் எந்த விதத்திலும் தயாராக இல்லை.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கேவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தள்ளார். செவ்வாய்கிழமை(16.01.2024) மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றிற்கு மின்சார இணைப்பை திறந்து வைத்துவிட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்....

தற்போதைய சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஸ அவர்களுடைய சிறிலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியினுடைய ஆதரவுடனேயே இன்று ஜனாதிபதியாக இருக்கின்றார். அதள பாதாளத்திற்குச் சென்ற இலங்கையை அவர் மீட்பதாகக் கூறிக்கொண்டு ஒரு மீட்பராக கூறிக் கொண்டிருந்தாலும் அவர் பொதுஜனப் பெரமுனவை விட்டு அவர் இன்னும் வெளியேறவில்லை.

ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடாத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஜனாதிபதி அவர்கள் ஒத்திவைத்தது போன்று ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது. இந்நிலையில் பொதுஜனப் பெரமுனவில் இருக்கின்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கமும், இன்னும் சிலர் சஜித் பிரேமதாஸவின் பக்கமும் சென்றிருக்கின்றார்கள். யாராக இருந்தாலும். இந்த நாட்டை மாறி மாறி நாட்டை ஆட்சி செய்தவர்கள் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளையும் செய்யவில்லை. சுதந்திரமடைந்த காலமிருந்து தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பபட்டு இரண்டாம் தரப் பிரஜைகளாக ஆக்கப்பட்டதைப் போன்று தொடற்சியாக இருக்கின்ற அரசாங்கங்கள் அவ்வாறுதான் செயற்பட்டுக் கொண்டே வருகின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலே ஜனாதிபதியாக வர விரும்புகின்ற சஜித் பிரேமதாஸவோ, அல்லது அனுரகுமார திசாநாயக்கவோ தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது அதற்குரிய தீர்வுத்திட்டம் இதுதான் என்று கூறாத நிலையில் இருக்கின்றார்கள்.

இன்றுகூட பட்டிப்பொங்கல் தினத்தில் மைலத்தமடு, மாதவனை, பண்ணையார்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள். எமது பிரதேசங்கள் தொடற்சியாக கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிழக்கு மாகாணத்திலே தமிழர்கள் மூன்றாம் தரத்திற்குச் செல்லக்கூடிய நிலமை இருக்கின்றது. அதனை மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் மக்கள் பெரும்பான்மையைக் கொண்டு நிமிர்த்தியுள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே அமைந்துள்ள மைலத்தமடு மாதவனை பிரதேசங்களில் பெரும்பான்மை சிங்கள மக்களைக் குடியேற்றி எமது குடிப்பரம்பலைக் குறைப்பதற்கான மறைமுக நிகழ்ச்சி நிரலினூடாக அரசாங்கமும், அரசாங்கத்தின் அதிகாரிகளும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில்தான் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக வரவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றார்களே தவிர தமிழ் மக்களின் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சனைக்கு, தமிழ் மக்களின் அரசியல் அபிலசைகளைப் பூர்த்தி செய்வதற்கு, எவருமே முன்வரக்கூடிய சூழ்நிலையில் இல்லை.  

ஓவ்வாரு மாதமமும் வெளிநாடுகளுக்குச் சென்றுவரும், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒரு உலகம் சுற்றுபவராக உள்ளார். இலங்கை பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த நாடாக இருக்கின்றது. கூலி தொழில் செய்பவர்கள் தொடக்கம் அரச உத்தியோகஸ்த்தர்கள் வரைக்கும் மூன்றுவேளை உணவை உண்ணமுடியாத சூழல் உள்ளதுஇலட்சக்காணக்கான மக்கள் மின்சாரப்பட்டியலை செலுத்த முடியாமல் அவர்களது இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை செங்கடலூடாக வியாபாரத்திற்காகச் செல்லும் கப்பல்களைக் காப்பாற்றுவதற்காக இலங்கையிலிருந்து யுத்தக்கப்பலை அனுப்பி வைக்கவுள்ளார்கள். எத்தனை கப்பல்கள் இலங்கைக்கு செங்கடல் ஊடாக வருகின்றது என்பதை  ஜனாதிபதி சிந்தித்துக் கொள்ள வேண்டும்இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள் செங்கடல் ஊடாகப் பயணிக்கின்றன. அந்தக் கப்பல்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்த நாடுகளிடத்திலேயே உள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சூழலில் இங்கிருந்து ஒரு கப்பலை அனுப்புவது தொடர்பில் சிந்திக்காமலுள்ளார்கள். இதற்காக செலவீடு செய்ப்படும் பணத்தை இங்கு நீர்க்கட்டணம், மின்சாரக்கட்டணம் செலுத்த முடியாமலுள்ள மக்களுக்கு நிவாரணங்கஙைக் கொடுத்தல்கூட அது மக்களுக்கு ஓரளவு பிரயோசனமாக அமையும். என அவர் இதன்போது தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: