25 Mar 2022

மண்முனைப்பற்றில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டு உதவித் திட்டங்கள்

SHARE

மண்முனைப்பற்றில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டு உதவித் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் வழங்கிவைப்பு

சுபீட்சத்தின்பால் நாட்டை கட்டியெழுப்பும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும்  "கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் - 2022" இற்கு அமைவாக மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள்(21) திகதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டிருந்ததுடன், பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களையும் வழங்கி வைத்துள்ளார்.

இவ்வாண்டிற்காக நிறைவேற்றப்பட்டுள்ள  அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு அமைவாக அதன் முதல் காலாண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள வட்டாரத்திற்கு நான்கு மில்லியன், கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு மூன்று மில்லியன் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 மில்லியன்  அபிவிருத்தி திட்டங்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் 85 பயனாளிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டு உதவித்திட்டங்கள் இதன்போது இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் யோகநாதன் றொஸ்மன், மண்முனைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினரும் முற்போக்கு தமிழர் கழகத்தின் ஆரையம்பதிக்கான பிரதான கள இணைப்பாளருமான சுரேந்திரன், பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எம்.ஜெயச்சந்திரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பயனாளிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் மற்றும்  துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் இவற்றைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் அரசாங்கத்திற்கும் இராஜாங்க அமைச்சருக்கும் தமது நன்றிகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.










SHARE

Author: verified_user

0 Comments: