3 Jun 2021

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அடுத்த வாரம் முதல் கொவிட் 19 தடுப்பூசி - மருந்து உற்பத்தி, விநியோக இராஜாங்க அமைச்சரை சந்தித்தார் வியாழேந்திரன்!

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவையான கொவிட் 19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக  மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் வைத்தியர் சன்ன ஜெயசுமனவை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று 03.06.2021 ஆந் திகதி வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொவிட் 19 கொரனா தொற்று ஆரம்பித்த காலம் முதல் இதுவரை 3000 தடுப்பூசிகளே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அடுத்த கட்டமாக வழங்கப்படவுள்ள தடுப்பூசிகளை மிக விரைவாக பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தற்பொழுது மூன்றாவது அலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்கின்றமையினால், இந்நிலையை கட்டுப்படுத்துவதாயின் மாவட்ட மக்களுடன் அதிகளவில் நெருங்கி கடமையாற்றும் கள உத்தியோகத்தர்கள், அவர்களது குடும்பங்கள், ஊடகவியலாளர்கள் அடங்களாக பொது மக்களுக்கும் தடுப்பூசிகளின் தேவைப்பாடுகள் அதிகமாகக் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆறு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் சனத்தொகையினைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஏறத்தாழ 3 இலட்சத்து 11 ஆயிரம் பேர் இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் நாட்டிற்கு வருகின்ற கொவிட் 19 தடுப்பூசிகளில் கூடுதலான தடுப்பூசிகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்குமாறு கோரிய இராஜாங்க அமைச்சர் இதன்போது எழுத்து மூல கோரிக்கையினையும் முன்வைத்துள்ளார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் வைத்தியர் சன்ன ஜெயசுமன இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் வேண்டுகோளுக்கமைய எதிர்வரும் வாரம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தடுப்பூசிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அதேவேளை 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும், கற்பிணித்தாய்மார்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டுமென்று இதன் போது இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் வைத்தியர் சன்ன ஜெயசுமன கூறியுள்ளார்.

கொவிட் 19 தடுப்பூசியினை மிக விரைவாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரும் நோக்கில் விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க  அமைச்சருடன் தாம் மேற்கொண்ட சந்திப்பு  வெற்றியளித்துள்ளதாக குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: