17 Mar 2021

நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்துதான் மாகாண சபை நிருவாகத்தை முடக்குவதற்கான துரோகத்தைச் செய்தன. நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்

SHARE

நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்துதான் மாகாண சபை நிருவாகத்தை முடக்குவதற்கான துரோகத்தைச் செய்தன. நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்.

மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கலினூடாகப் பெற்றுக் கொண்ட வரப்பிரசாதங்களை இல்லாமலாக்கியவர்கள் நல்லாட்சி அரசாங்கமும் அதனோடு கூட்டிணைந்திருந்த சிறுபான்மை சமூகங்களின் கட்சிகளும்தான் என்கின்ற உண்மையை நான் உரத்துக் கூறத் தயங்குவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிக் கிளைகளை கணினி மயப்படுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வு செவ்வாய்க்கிழமை 16.03.2021 இடம்பெற்றது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கணினி மயப்படுத்தலை ஆரம்பித்து வைத்து சமூர்த்தி பயனாளிகளுக்கு வங்கிப் புத்தகங்கiயும் சமூர்த்தி அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்து அவர் உரையாற்றினார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

2017ஆம் ஆண்டு செப்ரெம்பெர் 21ஆம் திகதி இந்த நாட்டிலே சிறுபான்மைக் கட்சிகள் சேர்ந்துதான் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்காக நாடாளுமன்றத்திலே கையை உயர்த்திய துரோக வரலாற்றை நாங்கள் பகிரங்கமாகச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

அன்று இந்த சிறுபான்மைக் கட்சிகளும் சிறு கட்சிகளும் ஆதரவளிக்காது விட்டிருந்தால் மகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டிருக்க மாட்டமாது. மாகாண சபைத் தேர்தல் நடந்து மாகாண சபை நிருவாகத்தின் கீழ் இப்பொழுது வரை பாரிய வேலைத் திட்டங்கள் நடந்தேறியிருக்கும்.

வெறுமனே எல்லை நிர்ணயம் என்று இல்லாத ஒரு விடயத்தை அதற்குள் புகுத்தி மாகாண சபைத் தேர்தலை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஒரு புதுக் கதையை அதற்குள் சொல்லி மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட்டு மாகாண சபை நிருவாகத்தை இயங்காமல் செய்த அந்த வரலாற்றுத் துரோகத்துக்கு இந்த சிறுபான்மைக் கட்சிகள் பதில் சொல்லியாக வேண்டும்.

ஆகவே தற்போதைய கோட்டபாய ராஜபக்ஷதலைமையிலான அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடவில்லை.

இன்றிருக்கின்ற பிரச்சினையை உருவாக்கியவர்கள் இந்த ஆட்சிக்கு முன்பிருந்த நல்லாட்சி அரசாங்கத்தினர்தான்.

ஆகையினால் அந்த சிறுபான்மைக் கட்சிகளும் சிறு கட்சிகளும் நல்லாட்சி அரசாங்கமும் கொண்டு வந்த புதிய முறைமையிலான மாகாண சபைத் தேர்தல் முறைமை எனும் விடயம் பழைய முறையிலேயே நடத்தப்படவேண்டும் என்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டியிருக்கிறது.

அதற்கு மீண்டும் நாடாளுமன்றத்தில்  மசோதா சமர்ப்பிக்கப்பட்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

அதை தற்போதைய அரசாங்கம் செய்யும் என்கின்ற நிச்சயமான நம்பிக்கை உண்டு.

கடந்த வியாழக்கிமை ஜனாதிபதியின் தலைமையிலே தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது.

அந்தக் கூட்டத்திலே நானும் பங்கேற்றிருந்தேன்.

அந்தக் கலந்துரையாடலிலே எவ்வாறு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முன்னெடுப்புக்களைச் செய்வது என்பதுபற்றி ஜனாதிபதி தெளிவாகச் கூறியிருந்தார்என்றார்.









SHARE

Author: verified_user

0 Comments: