26 Jan 2021

“செமட்ட செவண” வீடமைப்புத் திட்டத்தினால் மக்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டுள்ளதாக விசனம்.

SHARE

செமட்ட செவணவீடமைப்புத் திட்டத்தினால் மக்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டுள்ளதாக விசனம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டசெமட்ட செவணவீடமைப்புத் திட்டத்தினால் மக்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் கடந்த ஜனாதிபதித் தேர்தல் இறுதி காலகட்டத்தில் அவசர அவசரமாக வீடுகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் தோல்வியுற்ற நிலையில்  அவ்வீடமைப்பு  திட்ட நிர்மாணப்பணிகள்   முற்றுப் பெறாமல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடை நிறுத்தப்பட்டுள்ளமை மக்களுக்குப் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் ஏழரை இலட்சம் ரூபாய்  பெறுமதியான இவ் வீடுகளை நிர்மாணித்து தருவதாக கூறியுள்ளதுடன் வீட்டு நிர்மாண ஆரம்பகட்ட வேலைகளை பயனாளிகளின் பங்களிப்புடன் தொடருமாறு வலியுறுத்தப்பட்டதாகவும், அதற்கான பணத்தை மீள தருவதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் வீடுகள் இன்றி குடிசைகளில் வாழ்ந்த மக்கள் தமது நீண்ட கால கனவு நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் வீடமைப்பின்  ஆரம்பகட்ட வேலைகளுக்காக சுமார் மூன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் தமது சொந்த பணத்தை செலவு செய்துள்ளதாகவும் இதுவரை தமது வீடமைப்பு நிர்மாணப் பணிகளுக்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 75,000 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு ஜெயந்தியாய கிராமத்திலும் இவ்வாறான  வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 122 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்ட  வேலைகள் இடம்பெற்றுள்ளன சுமார் ஒன்றரை வருடங்களை  கடந்த நிலையில் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இவ்வீடமைப்பு நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமா? என்ற கேள்வி அப்பிரதேச மக்களிடம் எழுந்துள்ளது. இவ்விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி கைவிடப்பட்ட இவ்வீடமைப்பு நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து  தமது வீடுகளை பூரணமாக பூர்த்தி செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் கைவிடப்பட்ட  நிலையில் 185 வீடமைப்பு  திட்டங்களில் 3500 வீடுகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இருப்பதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.












SHARE

Author: verified_user

0 Comments: