14 Nov 2020

கிராமத்தையும் குளத்தையும் பாதுகாக்கும் புதிய சூழலியல் திட்டம் பண்டாரியாவெளியில் ஆரம்பித்து வைப்பு.

SHARE

கிராமத்தையும் குளத்தையும் பாதுகாக்கும் புதிய சூழலியல் திட்டம் பண்டாரியாவெளியில் ஆரம்பித்து வைப்பு.

கிராமத்தையும் குளத்தையும் பாதுகாக்கும் புதிய சூழலியல் திட்டம் பண்டாரியாவெளியில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாக சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் கே.முத்துலிங்கம் தெரிவித்தார்.

பண்டாரியாவெளி குளத்தைச் சூழ குளக்கட்டு நெடுகிலும் தென்னங்கன்றுகளை நாட்டும் இந்த நிகழ்வு சனிக்கிழமை (14.11.2020) மட்டக்களப்பு மாவட்டம் பண்டாரியாவெளி கிராமத்தில் இடம்பெற்றது.

அங்கு 100 நல்லின தென்னங் கன்றுகளும் அவற்றை குறிப்பிட்ட காலம் வரை கால்நடைகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இயற்கை;ககு இசைவாக மரக் கூடுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் முத்துலிங்கம் எமது அமைப்பு மரக்கன்றுகளை மட்டும் வழங்குவதில்லை அதோடு சேர்த்து நலிவுற்ற மக்களை வளப்படுத்த வேண்டும் என்பதே சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் நோக்கமாகும்.

அதேவேளை இவ்வமைப்பின் பிரதான நோக்கம் சூழலுக்கு எங்கெல்லாம் பாதிப்பேற்படுகின்றதோ சூழல் மாசுபடுகின்றதோ அதைத் தடுப்பது முழு முதற் கடமையாகும்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தரிசு நிலங்களில் பனை மரங்களையும் சதுப்பு நிலங்களில் கண்டல் தாவரங்களையும் நடுவது இயற்கைச் சமநிலைக்கும் பல்லுயிர்த் தன்மைக்கும் ஏற்ற வழியாகும்

இயற்கையோடு இணைந்து வாழாததும் இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடிக்காததும்தான் நாம் இப்பொழுது நோய் நொடிகளுக்கும் உடல் உபாதைகளுக்கும் இயற்கை அழிவுகளுக்கும் உள்ளாக வேண்டி நேரிடுகிறது. எனவே இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பினால் அந்நிறுவனத்தின் நிருவாக உத்தியோகத்தர் இந்திரன் ஜெயசீலியின் இணைப்பாக்கத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.நவநாகம் கிராம உத்தியோகத்தர் கோகிலா தவநந்தன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான  எஸ்.பிரதீபன் எஸ்.அகிலன் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.ஜெகதீஸன் கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் என். ஜெயராஜன் பொருளாளர் எஸ்.பிரணவராஜ் உட்பட கிராம மக்களும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.














SHARE

Author: verified_user

0 Comments: