27 Oct 2020

எதிர்க்கட்சி உறுப்பினர் எவருமில்லாததால் ஏறாவூர் நகர சபையின் கூட்டம் பிற்போடப்பட்டது.

SHARE

எதிர்க்கட்சி உறுப்பினர் எவருமில்லாததால் ஏறாவூர் நகர சபையின் கூட்டம் பிற்போடப்பட்டது.

ஏறாவூர் நகர சபையின் 31வது அமர்வு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவருமின்றி கோரமில்லாமல் சபை வெறிச்சோடிக் கிடந்ததால்  கூட்டம் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில் பிறிதொரு தினத்திற்குப் பிற்போடப்பட்டது.

ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை 27.10.2020 நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல்வாஸித் தலைமையில் நகர சபை சபா மண்டபத்தில் கூடிய பொழுது அக்கூட்டத்திற்கு 4 உறுப்பினர்களே சமுகமளித்திருந்தனர்.

சாமித்தம்பி சுதாகராசா எனும் அங்கத்தவர் தான் சுகயீனம் காரணமாக சபை அமர்வுக்குச் சமுகமளிக்க முடியவில்லை என கடிதம் மூலம் அறிவித்திருப்பதாக செயலாளர் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நகர சபைத் தலைவர் மக்கள் பிரதிநிதிகள் என்போர் பிரதேச மக்களின் நலனுக்காக மாத்திரம் செயற்பட வேண்டுமேயன்றி தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்ப செயற்பட்டு நகர சபைக் கூட்டங்களுக்கு வராமல் நகர சபைச் செயற்பாடுகளை முடக்க நினைப்பது மக்கள் வழங்கிய ஆணையை நிராகரித்து பிரதேச மக்களை அவமானப்படுத்துகின்ற விடயமாகவே கருதவேண்டியுள்ளது.

இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த சபை அமர்வின்போது சமர்ப்பிக்கப்பட்டு அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சபையின் மொத்தமுள்ள 17 அங்கத்தவர்களில் 12 பேர் எதிராகவும் 4 பேர் ஆதரவாகவும் இருப்பதைத் தெரிவித்தனர்.

சபையின் வாக்கெடுப்பு முடிவடைந்து கூட்டம் நிறைவுற்றதின் பின்னர் பாதீடு தோற்கடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சபை அங்கத்தவர்களிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் நகர சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி; இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சுயேட்சை குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் முறையே 5 4 3 2 1 1 1 என்ற அடிப்படையில் ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.

அடுத்த சபை அமர்வு அடுத்து வரும் 15 தினங்களுக்குள் கூட்டப்படும் என சபை முதல்வரால் அறிவிக்கப்பட்டது.







  


SHARE

Author: verified_user

0 Comments: