22 Oct 2020

அக்குறாணையில் முதல் தடவையாக 30 அடி ஆழத்தில் பாரிய கிணறு அமைக்கும் பணிகள் ஆரம்பம் 40 குடும்பங்கள் குடி நீர் பெறுவர்.

SHARE

அக்குறாணையில் முதல் தடவையாக 30 அடி ஆழத்தில் பாரிய கிணறு அமைக்கும் பணிகள் ஆரம்பம் 40 குடும்பங்கள் குடி நீர் பெறுவர். மட்டக்களப்பு மாவட்டத்தின் அதி கஷ்டப் பிரதேசமான கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முறுத்தானை அக்குறாணை கிராமங்களில் வசிக்கும் 40 குடும்பங்களுக்கு குடி நீரை வழங்கும் வகையில் 30 அடி ஆழத்தில் பாரிய கிணறு அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட “அருவி” பெண்கள் வலையமைப்பின் நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.

“அருவி” பெண்கள் வலையமைப்பின் சமூக அபிவிருத்திக்கான சுமார் 7 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்தக் கிணறு அமைப்புப் பணிகள் வியாழக்கிழமை 22.10.2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடினமான கற்பாறைகளைக் குடைந்து வெடி வைத்துத் தகர்த்து சுத்தமான நிலத்தடி நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையில் 16 அடி விட்டத்தில் இந்தப் பாரிய கிணறு அமைக்கப்படவுள்ளது.

நகரப் புறத்தை அண்டிய கிரான் பிரதேசத்திலிருந்து சுமார் 30 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள போக்குவரத்து வசதிகளற்ற ஒதுக்குப் புறக் கிராமங்களான அக்குறாணை முறுத்தானை கிராமங்களில் வாழ்ந்து வரும் வறுமைக்கோட்டு மக்களுக்கு இந்த குடி நீர்க் கிணறு ஒரு வரப்பிரசாதம் என்று பயனாளிகளான கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்தக் கிணறு அமைக்கப்படுவதன் மூலம் இந்த விவசாயப் பிரதேசத்தில் வாழும் அடி நிலைக் கிராம மக்களில் சுமார் 40 குடும்பங்கள் எந்தக் காலத்திலும் வற்றிப் போகாத குடி தண்ணீர் வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக “அருவி” பெண்கள் வலையமைப்பின் நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் மேலும் தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: