19 Jul 2020

மட்டக்களப்பு மாநகரசபை பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 800 மில்லியன் ரூபாய் நிதியில் வடிகால் அமைக்கப்படவுள்ளது

SHARE
 (விஜய்)  

மட்டக்களப்பு மாநகரசபை  எல்லைக்குள் வடிகான்களை புனரமைத்தல் மற்றும் வடிகான் இல்லாத பிரதேசங்களில் புதிய வடிகான்களை கட்டுமானம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை(17) மட்டக்களப்பு மாநகர சபையில் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபை  பிரதேசத்தில் மழை காலங்களில் நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.இதனால் பொதுமக்கள் வெள்ள காலப்பகுதியிலும் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகின்றனர்.இப் பிரச்சினைக்கு தீர்வாக வடிகான்கள் சீரமைக்கப்படும் போது நீரானது கடலில் கலப்பதனால் வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்த முடியும் எனும் கருத்துக்களை முன்வைத்து இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் வெள்ளப்பெருக்கினை குறைக்க வடிகான் கட்டுமான பொறிமுறைக்கு நவீன GPS  தொழிநுட்ப உதவியுடன் சம உயரக்கோட்டு படம்(Contour  Map) தயாரிக்கப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற தொழில்நுட்ப அதிகாரி குணசேகரம் என்பவரால்  தன்னார்வத் தொண்டின் அடைப்படையில் மக்களுக்கு பயன் பெறும் பொருட்டு இச் செயற்திட்டம் இக் கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டது.

மேலும்  முதல்வர் தலைமையில் துறை சார் தொழில்நுட்ப அதிராகரிகளின் உதவியுடன் குழு ஒன்று உருவாக்கப்பட்டு வடிகான் கட்டுமானத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் குறிப்பிடுகையில்  ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து பெறும் சுமார் 800 மில்லியன் ரூபாய் மட்டக்களப்பு மாநகர பிரதேச வடிகால் அமைப்பதற்கு  செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடிகால் அமைப்பு ஆரம்பகட்ட தொழில்நுட்ப வேலைத் திட்டங்களுக்கு பெரும்  செலுவுகள்  ஏற்படுவதனால் அதனை குறைத்து அனைத்து நிதியும் மக்களுக்கு பயன்பெற வேண்டும் எனும் நோக்கோடு இக் கலந்துரையாடலில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின்  உதவியுடன் குழு ஒன்று அமைக்கப்பட்டு வடிகால் அமைப்பு செயற்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கூறினார்.

இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, உறுப்பினர் பூபாலராஜா, துறை சார் திணைக்களங்களின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: