19 Jun 2020

தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லை ஒரு கிலோ 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய நெல் சந்தைப் படுத்தும் சபை நடவடிக்கை.

SHARE
தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லை ஒரு கிலோ 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய நெல் சந்தைப் படுத்தும் சபை நடவடிக்கை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சிறுபோகத்தில் நெற்சந்தையில் அறுவடை செய்யப்படும் நெல்லை அறுவடை காலத்திலேயே உடன் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் அறிவுறுத்தலில் நெல் சந்தைப் படுத்தும் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இம் மாவட்டத்தில் முற்கூட்டியே நெல் விதைப்பு இடம் பெறுவதால் ஏனைய மாவட்ட விவசாயிகளுக்கு முன்னர் நெல் அறுவடை செய்யப்படுவதால் இச் சிறுபோகத்தில் நெல் கொள்வனவினை தற்பொழுது அறுவடை தொடங்கியுள்ள காலத்திலேயே மேற் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தின் கவனத்தை கொண்டுவந்ததை அடுத்து சனிக்கிழமை (20) முதல் இம் மாவட்டத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியங்க்டாக கொள்வனவு செய்வதற்கு இச் சபையின் தலைவர் அனுமதி வழங்கியிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.

இதற்கமைய நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியங்க்டாக நெல் கொள்வனவு செய்யப்படும் முள்ளா முனை, புலி பாய்ந்தகல், தும்பங்கேணி, கயுவத்தை ஆகிய நெல் களஞ்சியங்களிலும் இது தவிர தூர விவசாயிகளின் நலன் கருதி மேலும் பல கேந்திரங்களில் உருவாக்கப்படும் நடமாடும் களஞ்சியங்கள் ஊடாகவும் நெல்லை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு வழங்கிய தகவலில் தெரிவித்தார்.

இதன்படி இம்மாவட்ட விவசாயிகள் சனிக்கிழமை (20) முதல் வெளி வியாபாரிகளுக்கு நெல்லை குறைந்த விலைக்கு கொடுப்பதை தவிர்த்து அரசாங்கத்தின் உத்தேச விலையான ஒரு கிலோ நன்கு உலர்த்தப்பட்ட நெல்லை ஐம்பது ரூபாவிற்கும் போதிய உலர்வு செய்யப்படாத நெல்லை ஒரு கிலோ நாற்பத்து நான்கு ரூபாவிற்கும் விற்பனை செய்யலாம் எனவும் வெளி வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு நெல்லை விற்று நட்டமடைவதிலிருந்து விடுபட்டு உரிய பயனைப் பெறுமாறும் முடிந்த அளவு நெல்லை உலர்த்தி அதிகபட்ச விலையான ஒரு கிலோ ஐம்பது ரூபாவிற்கு விற்பனை செய்து கொள்ள முயற்சிக்குமாறும் அரச அதிபர் கேட்டுள்ளார்.

இந்த நெல் கொள்வனவு ஏற்பாடு சம்பந்தமாக நெல் சந்தைப்படுத்தும் சபையினால் தமக்கு செய்யப்பட்டுள்ள அறிவுறுத்தலில் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதி நிதிகளுக்கு தெளிவு படுத்தும் விசேட கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபரின் தலைமையில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவும் விவசாய உற்பத்தியிலும் விவசாய வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். இந்த அரசாங்கத்தின் மூலம் எதிர் காலத்தில் விவசாயிகள் கூடுதல் நன்மை அடைய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நெல் உற்பத்தியிலும் மேலும் மறுவயல் பயிர் உற்பத்தியிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். நெல் சந்தைப்படுத்தும் சபை நெல்லை கொள்வனவு செய்யும் பணியில் சுமார் இராண்டாயிரத்து எழுநூறு மெற்றிக் தொன் அதிகளவு நெல்லை மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் விற்பனை செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். 
     
இந்த விசேட கூட்டத்தில் சிறுபோக நெல் கொள்வனவின் போது அமுல் நடத்தப்படும் விதி முறைகள் மற்றும் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் விரிவாக ஆராயப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான அறிவுரைகளும் சபை அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
இங்கு விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்து வெளியிடுகையில் சிறுபோக நெல்லை சநை;தைப்படுத்தும் சபையினால் சந்தைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்து தந்தமைக்கு அரசாங்கத்திற்கும் முயற்சிகளை மேற்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிற்கும் நன்றி பாராட்டுதலை இங்கு தெரிவித்தனர்.

இந்த விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், நெல் சந்தைப் படுத்தும் சபையின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் நிமல் ஏகநாயக மற்றும் நெல் சந்தைப் படுத்தும் சபையின் உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: