23 Jun 2020

கட்டுமுறிவு விவசாயப் பிரதேசத்தில் 2 மாதங்கள் கடந்தும் சுமார் 200 ஏக்கர் வயல் நிலங்களுக்கு இன்னமும் உரம் விநியோகிக்கப்படவில்லை

SHARE
கட்டுமுறிவு விவசாயப் பிரதேசத்தில் 2 மாதங்கள் கடந்தும் சுமார் 200 ஏக்கர் வயல் நிலங்களுக்கு இன்னமும் உரம் விநியோகிக்கப்படவில்லை கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்.

மட்டக்களப்பு – வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கட்டுமுறிவு விவசாயப் பிரதேசத்தில் நெல் விதைப்பு இடம்பெற்று தற்போது கிட்டத்தட்ட 2 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் அங்குள்ள சுமார் 200 ஏக்கர் வயல் நிலங்களுக்கு இன்னமும் உரம் விநியோகிக்கப்படவில்லை என கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்  தெரிவித்தார்.


இதுபற்றி செவ்வாய்க்கிழமை 23.06.2020 மேலும் தெரிவித்த குருகுலசிங்கம்,
கட்டுமுறிவு விவசாய பிரதேசத்தில் நெற் செய்கையிலீடுபட்டுள்ள விவசாயிகளில் சுமார் 47 பேர் தமது நெற்செய்கைக்கு உரம் இட முடியாமல் கவலையோடு உள்ளார்கள்.

இப்பிரதேசத்தில் சுமார் 1100 ஏக்கர் வயல் நிலங்களை நெற் செய்கைக்குப் பயன்படுத்த  முடியும் என அதிகாரிகள் அங்கீகரித்திருந்தனர்.

நெற்செய்கைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகளின் அந்த அங்கீகாரத்துடன் கட்டுமுறிவு விவசாயிகள் நெற் செய்கையில் ஈடுபட்டனர்.

ஆயினும் பல்வேறு பிரயத்தனங்களின் பின்னர் கட்டுமுறிவுப் பிரதேசத்தில் சுமார் 910 ஏக்கர் வயல் நிலங்களுக்கே அரசாங்கத்தால் உர விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

மீதமுள்ள சுமார் 200 ஏக்கர் நெல் வயல்களுக்கு இன்னமும் உரம் இடப்படாததால் நெற்பயிர்கள் அதன் வீரியத்தை இழந்துள்ளன. இதனால் விவசாயிகளும் செய்வதறியாது திணறிப் போயுள்ளார்கள்.

இந்த விடயம்பற்றி மாவட்டச் செயலாளர் உட்பட துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வந்துள்ள போதிலும் இன்னமும் பயனேதும் கிடைக்கவில்லை.

வாகரைப் பிரதேச விவசாயிகளும் ஏனைய மக்களும் கடந்த ஆயத வன்முறைகளாலும் சுனாமி, வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்களாலும் அதிகமதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களுக்கு விமேசனம் கிடைக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்றார்.



SHARE

Author: verified_user

0 Comments: