29 Apr 2020

கட்டுரை : போற போக்கப்பாத்தா உள்ளமும் கருகுது. எங்க போய் முடியப்போகுதோ தெரியா?

SHARE
(துசா)

கட்டுரை : போற போக்கப்பாத்தா உள்ளமும் கருகுது. எங்க போய் முடியப்போகுதோ தெரியா?
போற போக்கப்பாத்தா உள்ளமும் கருகுது. எங்க போய் முடியப்போகுதோ தெரியா? சோற்றுக்கு எண்டான வேளாண்மை செய்தம். அதுவும் நீர் இல்லாமா ஒருபக்கம் கருகுது! சோத்தாலையும் சேற்றாலையும் அடிவாங்கின கட்டம் மாதிரித்தான் இருக்குது என கணேசன் குஞ்சித்தம்பியிடம் பசிக்கொண்டிருந்தான். 

தனது வேளாண்மை வயலுக்கு செல்வதற்கு  சென்ற குஞ்சித்தம்பியை நிறுத்தி மணல்பிட்டி சந்தியை கடந்து குளுவினமடு றோட்டுல முன்னுக்கு வருகின்ற கொங்கிறீட் வீதியில் நின்று இருவரும் பேசிக்கொண்டனர். இஞ்ச பாரான், நீரின்றி நிலம் எப்படி வரண்டு போய் கிடக்கு. பயிரையும் பார் கருகிப்போய் வெட்டையாய் இருக்கு. என்று பக்கத்தில் உள்ள வேளாண்மை பயிரைக் காட்டி பேசத்தொடங்கினான் கணேசன்…..

நாட்டில கொரோனா, கொரோனா என்று சொல்லுறானுகள், முன்னமாதிரி இல்லாம இப்போ ஊரடங்கு சட்டத்தினையும் தளர்த்துறானுகள், தேர்தலும் வைக்கப்போறம், முதல் மாதிரி பாடசாலை, பல்கலைக்கழகம், அரச திணைக்களம் அனைத்தையும் திரும்பவும் ஆரம்பிக்கப்போகிறோம் என்று வேற சொல்லுறானுகள். ஆனா, முன்னமாதிரி இல்லாம இப்போ கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டுப் போகுது. முந்நூறு எவ்வளவு வேகமாக நானூறதாண்டிப் போய்விட்டது. இப்படி இருக்ககுள தேர்தல், மற்றமற்றதெல்லாம் எப்படி சரிவர போகுதோ தெரியாது? எல்லாத்திற்கும் ஆண்டவன்தான் கண்திறக்கணும். ஒவ்வொரு நாளும் வீட்டில போட்டு அடைத்தாலும் சோற்றுக்கும் வழியில்லாமா போயிடும். எங்கண்டனா வேலைக்கு நாலு நாளைக்குப் போனாத்தான் ஒரு கிழமையை கடத்தலாம். வேலைக்கு போகிற இடத்திலையும் யாரிடம் அந்தநோய் இருக்கும் எண்டும் தெரியா? அதையெல்லாம் பார்த்தா பட்டினியாத்தான் இருக்கணும் என்று கதையை விழுங்கியவனாக கணேசன் முணுமுணுத்தான். 

கணேசன் பேசியதைகேட்டுக் கொண்டிருந்த குஞ்சித்தம்பியும் பேச ஆரம்பித்தான். அண்ணேய், இது நமக்கு புதியதல்ல, இதற்கு முதலும் எவ்வளவு அழிவை கண்டுத்தோம். கொரனோய், கொளோரா என்று எத்தனை வந்திச்சு. போன, போன பக்கம் எல்லாம் வயிற்றோட்டம் அடித்து எத்தனைபேர் செத்தனர். என்ன செய்ற மனுப்பெருக்கம் கூட கூட அழிவும் வரும்தான் பிறந்துத்தம் செத்துத்தான் ஆகணும், எதுக்கும், நம்மட சுகாதார திணைக்களம் சொல்லுற அறிவுரைகளையும் கேட்டு நடப்பம். 

அது ஒருபக்கம் இருக்க, நமக்கு சோறுபோடுற வேளாண்மைச் செய்கையும் மழை பெய்யாததால அழிந்து போயிடும் போல இருக்கு எண்ணடா என்றான் கணேசன். தொடர்ந்தும் தனது வேளாண்மைச் செய்கை கதையை ஆரம்பித்த கணேசன், குளத்தில இருக்கிற நீரும் உரியகாலத்திற்குதான் தருவானுகள், அத பாய்ச்சி எடுக்க அடுத்த பக்கதால நிலம் காய்ந்து போயிடும். ரெண்டு மழையாச்சும் பெய்தால்தான் நிலத்தில ஈரம் கொஞ்சம் இருக்கும். இருளுற மழை எங்க போகுதெண்டும் தெரியா? எப்பதான் மழை பெய்யப்போகுதோ? இந்த கொரோனா தொலையைப்போகுதோ? எல்லாத்தையும் தான்தோன்றி அப்பன்தான் காப்பாற்றனும் எண்டு கூறியவனாக மேற்குபக்கம் சைக்கிளை தள்ளினான் கணேசன், கிழக்கு பக்கமாக குஞ்சித்தம்பியும் மிதித்தான்.

SHARE

Author: verified_user

0 Comments: