19 Mar 2020

அம்பாறை மாவட்டத்தில் தத்தளித்து கொண்டிக்கும் தமிழ்மக்களுக்கு ஒரு விடிவை பெற்றுக்கொடுப்பதற்கு தேர்தலில் கப்பல் சின்னத்தில் போட்டியிடுகின்றேன். கருணா அம்மான்

SHARE

(விஜய்)

அம்பாறை மாவட்டத்தில் தத்தளித்து கொண்டிக்கும் தமிழ்மக்களுக்கு ஒரு விடிவை பெற்றுக்கொடுப்பதற்கு தேர்தலில் கப்பல் சின்னத்தில் போட்டியிடுகின்றேன். கருணா அம்மான் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக தமிழ்மக்களுடன் நேரடியாக இருந்தும்,தமிழர்களின் காலடிக்குச் சென்று பார்வையிட்டும் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை அறிந்துதான் அம்மக்களுக்கு ஒரு விடிவை பெற்றுக் கொடுப்பதற்குதான் நான் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுகின்றேன் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் (கருனா அம்மான்) தெரிவித்தார்.

முதன்முறையாக  அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் கட்சியில் முன்னாள் பிரதியமைச்சர்  வி.முரளிதரன்  தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் 10  தமிழர்கள் புதன்கிழமை(18) பிற்பகல் 2.00 மணியளவில் வேட்புமனு தாக்கல் இடம்பெற்றது. இவ்வேட்பு மனுத்தாக்கலில் கட்சியின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இதன்போது கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்... அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அபிவிருத்தியிலும், நில நிருவாக, காணிப்பிரச்சனையில் தத்தளித்துக் கொண்டிருகின்றார்கள். அவ்வாறானவர்களை மீட்டெடுத்து அபிவிருத்தியையும் உரிமையையும் ஜனாதிபதி கோத்தபாயவுடன் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன். நான் அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக தமிழ்மக்களுடன் நேரடியாக இருந்தும், தமிழர்களின் காலடிக்குச் சென்று பார்வையிட்டும் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை அறிந்துதான் அம்மக்களுக்கு ஒரு விடிவை பெற்றுக் கொடுப்பதற்குதான் நான் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து பல பேச்சுவார்த்தைகளை கடந்த மூன்று மாதங்களாக மேற்கொண்டு வந்தேன். இதன் பயனாக அகில இலங்கை மகாசபையுடன் கைகோர்த்து தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியுடன் கப்பல் சின்னத்தில்  போட்டியிடுகின்றோம்.

கடந்த 72 வருடங்களாக தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை போலித்தேசியம், சமஸ்டி, சுயநிர்ணய உரிமை, ஐநா விசாரணை என்று மக்களை பேய்காட்டினார்களே தவிர தமிழ்மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழ்மக்கள்  ஏமாற்றப்பட்டுள்ளார்கள். தமிழ்மக்களின் காணிகள், நிருவாகம் பறிக்கப்பட்டு தமிழர்கள் அநாதையாக்கப்பட்டார்கள். தமிழர்களின் பிரச்சனைகள் தமிழ்தேசிய கூட்டமைப்பால் பாராளுமன்றிலே பேசப்படவில்லை. இதனால் வெறுப்படைந்த தமிழ்மக்கள், கிழக்கு மகாண தமிழ்மக்கள் சலிப்படைந்து தமிழ்தேசிய கூட்டமைப்பை தூக்கி வீசிவிட்டார்கள்.

நாங்கள் செயற்பாட்டு அரசியலை கைக்கொள்ள வேண்டும். இதுவரையும் தமிழர்களின் அரசியல் என்பது தனிநபர்களின் அல்லது கட்சிகளின் நலன்சார்ந்த தேர்தல்மைய அரசியலாகத்தான் காணப்பட்டது. நான் பாராளுமன்றம் சென்றால் கோமாரியை மையமாக கொண்ட பிரதேச செயலாளர் பிரிவும், மல்வத்தையை மையமாக கொண்ட பிரதேச செயலாளர் பிரிவும், கல்முனை வடக்கு உபபிரதேச செயலாளர் பிரிவும் தரமுயர்த்துவதற்கு முன்னுரிமையளிப்பேன்.

இனியும் தமிழ் மக்கள் தமிதேசிய கூட்டமைப்பை அங்கிகரிக்க வேண்டாம். இன்னும் அங்கிகரித்தால் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, நிருவாக பங்கீடு மாற்றுச் சமூகத்தின் கைகளுக்கு சென்றுவிடும். ஏமாந்தது போதும். இன்னும் தமிழ்மக்கள் ஏமாந்த சமூகமாக இனியும் இருக்ககூடாது. அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் கப்பல் சின்னத்திற்கு வாக்களித்து என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி காட்டுங்கள். சொல்வதை செய்து காட்டுவேன். மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கப்பலில் தமிழ்மக்கள் ஏறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். மிதக்கும் அரசியல் கப்பலில் தமிழ்மக்கள் ஏறுங்கள்.அப்போதுதான் உரிமையுடன் அபிவிருத்தி கிடைக்கப்பெறும் எனத் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: