13 Mar 2020

கொரோனாவால் மட்டக்களப்பு தனித்து விடப்படும் நிலை உள்ளது - மாநகர சபை உறுப்பினர் மதன்

SHARE
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அமைந்துள்ள சூழல் ஓர் தீவாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியிருக்கும் நகர்ப் பகுதியாகவும், பிரதான பாடசாலைகள் உள்ள இடமாகவும் அமைந்துள்ளது. தொற்றுக்கள் ஏற்பட்டால் இந்தத் தீவினை தனிமைப்படுத்தும் அபாயம் உள்ளதாக  மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு மாநகர சபையின் 31ஆவது சபை அமர்வானது வெள்ளிக்கிழமை (13.03.2020) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார்.

கொரொனா நோய்த்தொற்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை தடுத்து வைத்து அவதானிக்கும் வகையில் மட்டக்களப்பு கம்பஸினை ஓர் முகாமாக மாற்றியுள்ளார்கள், அங்கு தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்கு கொறொனா தொற்றின் அறிகுறி தென்பட்டால் அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு கொண்டு வரவுள்ளதாக அறிகின்றேன்.
 
இலங்கையில் பல இராணுவ முகாம்கள் காடுகளுக்குள் தனித்து உள்ளன, பல தனியான தீவுகள் உள்ளன இவை அத்தனையும் இருக்க மட்டக்களப்பைத் தெரிவு செய்துள்ளார்கள். இதன் ஊடாக இந்த நாட்டின் அரசாங்கங்கள் மாறி மாறி மட்டக்களப்பினை ஓர் பழிதீர்க்கும் இடமாகப் கருதுகின்றார்களோ என எண்ணத்தோன்றுகிறது.

இலங்கையில் மொத்தமாக 12 போதனா வைத்தியசாலைகள் உள்ளன. அதைவிடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை மாத்திரம்  தெரிவு செய்தமை தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுகிறது.  இங்கு பாரிய நோய்த் தொற்றுக்களுக்கு சிகிச்சை வழங்கக் கூடியளவிலான மருத்துவ உபகரணங்களோ சாதனங்களோ இல்லை. அத்துடன் எங்களது வைத்தியசாலை அமைந்துள்ள சூழல் ஓர் தீவாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியிருக்கும் நகர்ப் பகுதியாகவும், பிரதான பாடசாலைகள் உள்ள இடமாகவும் அமைந்துள்ளது. தொற்றுக்கள் ஏற்பட்டால் இந்தத் தீவினை தனிமைப்படுத்தி விடுவார்கள்.

எங்களது மாவட்ட மக்களுக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால் நிச்சயமாக இங்குதான் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து வெளிமாவட்டத்தவர்களுக்கு இங்கு சிகிச்சைகளை வழங்குவதன் ஊடாக எமது மாவட்ட மக்களுக்கு நோயை பரப்புவதனை அனுமதிக்க முடியாது.

சென்ற வருடம் கூட நான் ஒர் பிரேரணையை இங்கு சமர்ப்பித்திருந்தேன். எமது வைத்தியசாலைக்கு MRI ஸ்கண் ஒன்றின் தேவை இருக்கின்றதென்றும், அதே போல பல மருத்துவ இயந்திரங்களின் சாதனங்களின் தேவைகள் இருக்கின்றதாகவும் தீர்மானமெடுத்து அதனை குறித்த அமைச்சிற்கும் அனுப்பியிருந்தோம்.

இது இவ்வாறு இருக்க எமது மாவட்டத்தின் தேவைகளை உதாசினம் செய்யும் வகையில் அன்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் விமல் வீரவன்சவின் அழுத்தத்தினால் எமது மாவட்டத்திற்கு வர வேண்டிய MRI ஸ்கண் இயந்திரமானது இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வாயிலாக அறியக் கூடியதாகவுள்ளது.

அத்துடன் உலகில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரணா வைரஸினால் இறந்துள்ளதோடு, இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் பல அரச தலைவர்கள், அவர்களின் உறவினர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ் மக்களை உண்மையாக நேசித்தவரும், தமிழர்களின் கலை, கலாசாரங்களை மதித்து வருபவருமான ஜஸ்றின் ரூடோ அவர்களின் மனைவியும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டும் என இறைவனை பிரார்திக்கின்றேன். எனத் தெரிவித்தார்.   

SHARE

Author: verified_user

0 Comments: