23 Feb 2020

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லனுலை விவேகானந்த வித்தியாலத்தில் நடைபெற்ற தாய்மொழி தின நிகழ்வுகள்

SHARE
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லனுலை விவேகானந்த வித்தியாலத்தின் ஏற்பாட்டில் உப்புக்குள கூழாவடி காளி கோயில் முன்றலில் தாய்மொழி தின நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றன.
சமூகத்தினையும்,  பாடசாலையையும் இணைத்து மாணவர்களுக்கு அனுபவ ரீதியான கற்றலையும்,  தாய்மொழியின் அவசியதன்மையையும் உணர்த்தும் பொருட்டு “ஊரோடு உறவாடு” எனும் தலைப்பில் சமூகத்தின் ஒத்துழைப்போடு தாய்மொழி தின நிகழ்வு நடாத்தப்பட்டது.

இதன் போது,  தமிழுக்கு தொண்டாற்றிய பெரியார்களின் 195 உருவப் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்ததுடன், சுவாமி விபுலானந்தரின் திருவுருவ படத்திற்கு மாலையும் அணிவிக்கப்பட்டு,  விபுலானந்தர் வட்டகளரியிலே நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

மேலும்,  தொழில் முறையில் பயன்படுத்திய பல்வேறு பொருட்களும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.  விவசாய தொழிலின் போது பயன்படுத்திய நெற் கோட்டை,  பட்டறை,  அவுரி, போன்றவற்றை  அவ்விடத்திலே முதியோர்கள் செய்து காண்பித்தனர்.

கரகம் போன்ற பாரம்பரிய கலைகளும் நாட்டார் பாடல்,  மீனவர் பாடல்,  பேச்சு போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன்,  பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழி தினப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

விவசாய தொழிலில் பின்பற்றிய மொழிகள் தொடர்பிலான கலந்துரையாடலும் இதன் போது இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மு.தயாநிதி,  முதலைக்குடா மகா வித்தியால அதிபர் எஸ்.கோபாலபிள்ளை,  ஆசிரிய ஆலோசகர் புவனசிங்கராசா,  ஆசிரியர் மா.ஜீவரெத்தினம் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெற்றோர்,  மாணவர்களும் கலந்து கொண்டனர்.
















SHARE

Author: verified_user

0 Comments: