17 Dec 2019

அடிக்கடி குழிகளாவதும் பின் ஒட்டப்படும் வீதியுமான மண்முனை வீதி புனரமைப்பு செய்யப்படுமா?

SHARE
அடிக்கடி குழிகளாவதும் பின் ஒட்டப்படும் வீதியுமான மண்முனை வீதி புனரமைப்பு செய்யப்படுமா?

மண்முனை பாலத்தில் இருந்து மகிழடித்தீவு வரையான வீதி உடைந்து மேடும், பள்ளமாகவும் காணப்படுவதினால் போக்குவரத்துச் செய்வதில் தொடர்ந்தும் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மண்முனை பாலம் திறக்கப்பட்ட போது, 5 ஆம் கட்டை சந்தியிலிருந்து மாவடிமுன்மாரி வரை அமைக்கப்பட்ட குறித்த காப்பட் வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது.
குறித்த வீதி அமைக்கப்பட்டதில் இருந்து பல தடவைகள்  உடைந்து குன்றும், குழியுமாக காட்சிகொடுத்தது. இந்நிலையில் குறித்த குழிகளை மூடும் செயற்பாடுகள் நடைபெற்றும் வந்தன. அதற்கமைய அண்மைக்காலத்திலும் இச்செயற்பாடு முன்னெடுக்கபட்டிருந்த நிலையில் மீண்டும் வீதியில் பல குழிகள் உருவாகி போக்குவரத்து செய்வதில் மக்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக பயணிகள் குறிப்பிடுகின்றனர்.

படுவான்கரைப் பகுதிக்கும், எழுவான்கரைப் பகுதிக்குமான மிக முக்கிய போக்குவரத்து வீதியாகவும், பாரஊர்திகள், வைத்தியசாலை நோயாளி காவு வண்டிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இவ்வீதியின் ஊடாக அம்பாறை, களுவாஞ்சிகுடி போன்ற பல பகுதிகளுக்கும் போக்குவரத்துச் செய்கின்றனர். இதேவேளை இலங்கை போக்குவரத்துச்சபை, தனியார் போக்குவரத்துசபையினரின் பேரூந்துகளும் இவ்வீதியில் போக்குவரத்தில் ஈடுபட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வீதியானது தொடர்ச்சியாக உடைவதும், பின்னர் குழிகள் நிரப்பப்படுவதும் நீக்கப்பட்டு உறுதியானதும், நீண்டு நிலைக்கக்கூடிய வகையிலும் வீதியினை செப்பனிட்டு தருமாறு பொதுமக்கள் மற்றும் பிரயாணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: