31 Oct 2019

மக்கள் புத்தியுடன் வாக்களிக்காவிட்டால் இன்னும் பல தசாப்தங்களுக்கு தலைதூக்க முடியாத அதல பாதாளத்தில் விழ வேண்டி வரும். எச்சரிக்கிறார் சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்தன.

SHARE
மக்கள் புத்தியுடன்  வாக்களிக்காவிட்டால்  இன்னும் பல தசாப்தங்களுக்கு தலைதூக்க முடியாத அதல பாதாளத்தில் விழ வேண்டி வரும்.
எச்சரிக்கிறார் சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்தன.

மக்கள் புத்தியுடன்  வாக்களிக்காவிட்டால்  இன்னும் பல தசாப்தங்களுக்கு தலைதூக்க முடியாத அளவில் அதல பாதாளத்தில் விழ வேண்டி வரும் என எச்சரித்துள்ளார்  சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரும் நாட்டின் மூத்த சமூக சேவையாளருமான கலாநிதி ஏ.ரி. ஆரியரத்தன.

“காலம் கனிந்து வந்துள்ளது” என்ற தொனிப் பொருளில் வியாழக்கிழமை 31.10.2019 மட்டக்களப்பு நகரெங்கும் விநியோகிக்கப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தின் வழியாக கலாநிதி ஆரியரத்ன சமகால அரசியல் நிலவரங்களை சிலாகித்து கருத்துக் கூறியுள்ளார்.

அந்தப் பிரசுரத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, புதிய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்ப தற்போது காலம் கனிந்து வந்துள்ளது.

புதிய அரசியல் பொருளாதார முறையினைக் கட்டியெழுப்பும் அதிகாரம் பொதுமக்களுக்கே உரியது.

2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதியிலிருந்து டிசெம்பெர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதியாகும்.

இக்காலப்பகுதியில் சாதாரண பொதுமக்கள் புத்தியுடன்  செயற்பட்டு தங்களுடைய வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தாவிடில் இன்னும் பல தசாப்தங்களுக்கு தலைதூக்க முடியாத அளவில் அதல பாதாளத்தில் விழ வேண்டி வரும்.

கடந்த 70 ஆண்டு காலத்துக்குள் இந்நாட்டு பொருளாதாரமும் சமூக கலாசார விழுமியங்களும் முழுமையாக அழிவதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது நாம் கைக்கொண்ட மேற்கத்தேய அரசியல் முறைமையேயாகும். இதனால் எமது நாடு முழுமையாக அழிந்தே விட்டது.
சிங்களர், தமிழர் முஸ்லிம்கள், பறங்கியர், மலாயர் போன்ற பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் இன ரீதியான கட்சி முறைமையினால் இலங்கையர் என்ற அடையாளமே இல்லாமல் போய்விட்டது.

எனவே, இனிவரும் எல்லாத் தேர்தல்களிலும், மக்கள் புதிய அரசியல் மூலோபாயங்களின்படி முன்வருகின்ற சிறந்த, சுயநலமற்ற, நாட்டுக்காக சேவை செய்யக்கூடியவர்களை தெரிவு செய்வதற்கு அறிவுடையவர்களாக இருக்க வேண்டும்.

இன, மத, பேதங்களை முன்வைத்து கட்சிகளையும் குழுக்களையும் உருவாக்கி மக்களைப் பிளவுபடுத்தக் கூடிய வாக்கை அளிப்பதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வேறு முறையில் கூறுவதானால் கட்சிகள் மட்டுமன்றி இன மத பேதத்தை முன்வைத்துச் செயற்படுகின்ற அரசியல்வாதிகளையும் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

சில தேசிய அதிகாரத்தவர்கள் வன்முறைகளை உருவாக்கி நாட்டை நிலைகுலையச் செய்து வெளிநாட்டு இராணுவத்தைக் கொண்டுவருவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

அரச அதிகாரிகளின் ஊதியத்தைக் கூட்டுவோம், சமூர்திக் கொடுப்பனவை அதிகரிப்போம், வேலை வாய்ப்புக்களை வழங்குவோம் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி வாக்குறுதியளிக்கும் அரசியல்வாதிகளைப் புறந்தள்ளி விட்டு யதார்த்தவாதி அரசிலுக்குள் நுழைவோம்.

இந்த வேண்டுகோளை முன் வைக்கும் நான் எனது வாழ்நாளில் 60 வருட காலத்தை நாட்டு மக்களின் சமூக சேவைக்காக அர்ப்பணித்தவன்.

இனமத மொழி பிரதேச வேறுபாடுகளற்று நாட்டு மக்களுக்குச் சேவை செய்தவன் என்கின்ற முறையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் அறைகூவல் யாதெனில், இனி வரப்பேவாகின்ற எல்லாத் தேர்தல்களிலும் அனைத்துக் கட்சிகளையும் தோற்கடித்து புதிதாக உருவாகிற ஒழுக்கம் சார்ந்த புது அரசியல் சமூக பொருளாதார  சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஒரு தொடக்கத்திற்கு உங்கள் அரசியல் அதிகார வாக்குச் சீட்டைப் பாவிக்க வேண்டும்” என்பதேயாகும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: