26 Sept 2019

கிழக்கில் செயற்படுகின்ற அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் பொதுச் சின்னமொன்றின்கீழ் ஒன்றிணைய வேண்டும். தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் (தலைவர், கிழக்குத்தமிழர் கூட்டமைப்பு)

SHARE
கிழக்கில் செயற்படுகின்ற அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் பொதுச் சின்னமொன்றின்கீழ் ஒன்றிணைய வேண்டும். தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் (தலைவர், கிழக்குத்தமிழர் கூட்டமைப்பு)
இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்தினூடாக 1987 இல் தற்காலிகமாகவேனும் இணைக்கப்பெற்றிருந்த வடக்குகிழக்கு மாகாணங்கள் நீதிமன்றத் தீர்ப்பினொன்றின் ஊடாக 2007 இல் தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பெற்றபின்னர் உருவாகியுள்ள கிழக்குத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் களநிலையைக் கருத்தில் கொள்ளும்போதும், அண்மைக்காலமாகக் கிழக்குத் தமிழர்களுக்குக் குறிப்பாக 2012ஆம் ஆண்டிற்குப் பின் ஏற்பட்ட அரசியல் பின்னடைவுகளின் அனுபவத்தின் அடிப்படையிலும் விடயங்களை வைத்துப் பார்க்கும்போது கிழக்குத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் இருப்பைத் தக்கவைத்துப் பேணி வளர்த்தெடுப்பதற்கு முதலில் அவசியமானது கிழக்குத் தமிழர்கள் கிழக்கைத் தளமாகக் கொண்ட ஒன்று திரண்ட அரசியல் சக்தியாகத் தங்களைத் தகவமைத்துக் கொள்வதாகும். இது ஜனநாயக நடைமுறையின்கீழ் கிழக்கிலே செயற்படுகின்ற அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் தங்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகளையெல்லாம் ஒரு புறம் மூட்டை கட்டிவைத்துவிட்டு ஒரு பொதுச் சின்னத்தின்கீழ் ஒன்றிணைவதன் மூலமே சாத்தியப்படும். 

என கிழக்குத்தமிழர் கூட்டமைப்பின் தலைவர், தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் புதன்கிழமை(25) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…

கிழக்கின் அரசியல் அரங்கிலே செயற்படுகின்ற அனைத்துப் பதிவுசெய்யப்பெற்ற தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பதிவுசெய்யப்பெறாத தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஏன் தேசியக்கட்சிகளில் இணைந்து அரசியலில் ஈடுபடுகின்ற தமிழர்களும் உட்பட அனைவரும் பொதுச் சின்னமொன்றின் கீழேயே அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடவேண்டும் என்ற விடயம் அல்லது கருத்தியல் உள்நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும்கூட இன்று தமிழர்களிடையே பேசுபொருளாகப் பரிணமித்துள்ளது. 

இதனை எல்லோருமே மறுப்பின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படியானால் இப் பொதுச் சின்னத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது. இப்பொதுச் சின்னத்தைக் கடையில் வாங்கிக் கொள்ளலாமா? இல்லை. அல்லது இப் பொதுச்சின்னம் வானத்திலிருந்து திடீரென்று பூமியில் விழுமா? இல்லை. அல்லது யாராவது கூப்பிட்டுத் தருவார்களா? இல்லை. 

தேர்தல்திணைக்கள விதிகளுக்கமைய கிழக்கில் செயற்படுகின்ற பதிவு செய்யப்பெற்ற தமிழ் அரசியல்கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினூடாக அரசியல் கூட்டணியொன்றினை (Political Allianceஏற்படுத்திக்கொள்வதன் மூலமே ‘பொதுச்சின்னம்’ ஒன்றினைப் பெற்றுக் கொள்ளமுடியும். இங்கு ‘பொதுச்சின்னம்’ என்பது ஏற்கெனவே செயற்பாட்டிலுள்ள தனிப்பட்ட கட்சியொன்றின் சின்னமாக இருக்கமுடியாது என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்த சாதாரண மாணவனுக்கும் விளங்கக்கூடியதொரு விடயமாகும். 

ஆனால், சில தமிழ் அரசியல்கட்சிகள் குறிப்பாக ஒப்பீட்டளவில் ஏனைய கட்சிகளைவிடத் தாங்கள் வாக்குவங்கியைக் கொண்டிருப்பதாகக் கருதும் மற்றும் தங்களைப் பாரம்பரியக் கட்சிகள் எனத் தூக்கிப் பிடிக்கும் கட்சிகள் ஏனையகட்சிகளைத் தங்களுடைய கட்சிச் சின்னத்தின்கீழ் வரும்படி கேட்பதும் - அல்லது அத்தகைய கட்சிகள், ஏனையகட்சிகளெல்லாம் ஒன்று சேர்ந்தால் அதன்பின்பு தாங்களும் சகல

விட்டுக்கொடுப்புகளுடன் பொதுச் சின்னமொன்றின்கீழ் இணையத்தயார் என்று கூறுவதும் தனிநபர் நலன் சார்ந்ததாக அல்லது கட்சிநலன் சார்ந்ததாக மட்டுமே இருக்கமுடியுமே தவிர மக்கள் நலன் சார்ந்ததாக அமையமாட்டாது. இக் கட்சிகள் இப்படிக்கூறுவது கிழக்கில் தமிழர்களிடையே அரசியல்கூட்டணி ஒன்று உருவாவதைத்  தடுப்பதற்கான அல்லது இழுத்தடிப்பதற்கான சுயலாபம் கருதிய ஓர் உபாயம் ஆகும்.

கட்சி, சின்னம், கொடி, கருத்தியல்கள், அரசியல் சித்தாந்தங்கள் - கொள்கைகள் - கோட்பாடுகள் எல்லாமே மக்களுக்கானவையே தவிர அவை தனிநபருக்கானதோ அல்லது ஒரு கட்சிக்கானதோ என்ற அளவில் மட்டுப்படுத்தக் கூடியதல்ல. அரசியல் மக்களுக்கானது என்பதே ‘அறம்’ ஆகும். மேலும், எடுத்த எடுப்பிலேயே ஊர்கூடித் தேர் இழுப்பதில்லை. முதலில் தேரின் வடத்தை நான்கைந்து பேர்தான் வந்து கையில் பிடிப்பார்கள். அதன் பின்னர்தான் ஊர்கூடுவதும் தேர் ஓடுவதும். இதுதான் இயங்கியல் வீதி.

எனவே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் ஊடாக முதலில் சிலகட்சிகளாவது ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியொன்றினை உருவாக்கிப் பொதுச்சின்னமொன்றினைப் பெற்றுக்கொள்ளட்டும். அதன் பின்னராவது வெளியில் நிற்கும் கட்சிகள் அப்பொதுச் சின்னத்தின்கீழ் ஒன்றிணையட்டும். அதுவே நடைமுறைச் சாத்தியமானது. 

இங்கு வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்க்கவேண்டும். 1944இல் உருவான அமரர்.ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவந்து 1949இல் அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்கள் உருவாக்கியதுதான் இலங்கைத் தமிழரசுக்கட்சி. அன்றிலிருந்து ஆரம்பித்து தமிழர்களின் அடிமைச் சாசனம் என வர்ணிக்கப்பெற்ற 1972ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்புச் சட்ட நிறைவேற்றக் காலம்வரைக்கும் கீரியும் பாம்பும் போலவே இரண்டு கட்சிகளும் தமிழ் மக்களிடையே அரசியல் செய்தன.

ஆனால், பின்னர் ஒட்டுமொத்தத் தமிழ்மக்களினதும் தேவைகருதி இரண்டு கட்சிகளும் முறையே தங்களது கட்சிச் சின்னங்களான ‘சைக்கிள்’ மற்றும் ‘வீடு’ என்பவற்றை விட்டுக்கொடுத்துத் ‘தமிழர்விடுதலைக்கூட்டணி’ என்னும் அரசியல் கூட்டணியை ஏற்படுத்திப் பொதுச்சின்னமான ‘உதயசூரியன்’ சின்னத்தை ஏற்றுக்கொண்டன. அன்று எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுக்கும் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களுக்கும் இருந்த மனப்பக்குவம் இன்றுள்ள தமிழ் அரசியல்கட்சிகளின் தலைவர்களுக்கு வரவேண்டும். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: