26 Sept 2019

களமிறங்கப்போகும் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் மட்டக்களப்பில் தூய அரசியலுக்கான இயக்கத்தின் 5 கேள்விகள்.

SHARE
களமிறங்கப்போகும் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் மட்டக்களப்பில் தூய அரசியலுக்கான இயக்கத்தின் 5 கேள்விகள்.
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போகும் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தூய அரசியலுக்கான இயக்கத்தின் சார்பாக 5 வினாக்கள் தொடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பில் அதன் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மார்ச் 12 தூய அரசியலுக்கான இயக்கத்தின் திட்டமிடல் பங்கேற்புக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் இணைய அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை 24.09.2019 இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தூய அரசியல் இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகின்ற அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் தமது தூய அரசியல் இயக்கம் சார்பாக 5 கேள்விகளைத் தொடுத்து அதற்கான பதில்களைப் பகிரங்கப்படுத்துமாறு கோர இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இலங்கையின் குடியியல் உரிமைகளின் அடிப்படையில் சமூக பொருளாதார பால்நிலை நீதியினை உறுதிப்படுத்துவதற்கான உள்நாட்டுச் சட்டங்களை சர்வதேச சரத்துடன் உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பிணிப்பை எவ்வாறு வெளிப்படுத்துவீர்கள்?

இலங்கையின் ஒன்றிணைந்த சூழலினை, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் பேண்தகு பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்வதிலும் வளர்ச்சியின் பயன்கள் பிராந்திய பிரதேச ரீதியாக சமத்துவமாக பகிரப்படுவதற்குமாக போதிய சமநிலையைப் பேணுவதற்கும் உங்கள் வகிபாகமும் அர்ப்பணிப்பும் எவை?

இலங்கையில் கடந்த காலங்களில் கைச்சாத்திடப்பட்டதும் எதிர்காலத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதுமான சர்வதேச பிரகடனங்கள் சமவாயங்கள் என்பனவற்றை தேசிய சட்டவாக்கத்திற்குள் உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பும் காலவரைபுச் சட்டகமும் (வுiஅந குசயஅந றுழசம) எவை?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தை தேசிய இணக்கப்பாட்டுடன் முன்னெடுப்பதற்கு நீங்கள் கடைப்பிடிக்கவுள்ள யுக்திகள் எவை?
இலங்கையில் பல்லினத்தன்மையை பிரதிபலித்து மேம்படுத்துவதற்கும் சிறுபான்மை இனங்கள் பிரிவுகள் குழுக்கள் ஆகியோரின் பாதுகாப்பினையும் வளர்ச்சியினையும் உறுதிப்படுத்துவதற்கும் சகலரதும் குடியியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஏற்புடையதான புதிய அரசியல் யாப்பினை ஒன்றிணைந்து உருவாக்குவதற்கான உங்கள் அர்ப்பணிப்பு என்ன?

இலங்கையில் மாணவர்களின் தனித்துவத்தை அடிப்படையாகக்கொண்ட, சமத்துவமான, சகலதையும் உள்ளடக்கியதுமான பூகோள தரத்திலான (பின்லாந்து கல்வித்தரத்தோடு இணைந்த) தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படுமா எனவும் அதனை அமுல்படுத்துவதற்கு தேசிய பாதீட்டில் எத்தனை சதவீதம் ஒதுக்கப்படும் என்பதையும் வெளிப்படுத்தவும்? ஆகிய ஐந்து வினாக்களும் வரையப்பட்டுள்ளன.

இதேவேளை தூய அரசியல் இயக்கத்தின் நாடளாவிய மாவட்டத் தீர்மானங்களை கலந்தாலோசிக்கும் ஒன்றிணைவு ஒக்ரோபெர் 5ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாகவும் அந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் சார்பான இறுதி வினாக்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளிக்கப்படும் என்றும் தூய அரசியல் இயக்கத்துக்கான செய்றபாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் மாகாணப் பணிப்பாளர் ஏ. சொர்ணலிங்கம் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு இடம்பெறக் கூடிய தேர்தல்களுக்கான திட்டமிடல் செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கி நிகழ்வை நெறிப்படுத்தினார்.

தூய அரசியல் இயக்கத்தில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வமதப் பேரவை உறுப்பினர்கள், உள்ளுர், சர்வதேச அரச சார்பற்ற தன்னார்வ அமைப்புக்களின் பணியாளர்கள்,  பெண்களுக்காக பணியாற்றும் நிறுவனங்களின் அங்கத்தவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அங்கம் வகிக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: