10 Jun 2019

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் அலுவலர் அடையாள அட்டை விநியோகத்தில் கொள்ளை இலாப செயற்பாடுகள் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

SHARE
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் அலுவலர் அடையாள அட்டை விநியோகத்தில் கொள்ளை இலாப செயற்பாடுகள்  இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
நாட்டின் தற்போதய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கல்விப் பணிப்பாளர்களின் கையொப்பத்துடன் பாடசாலைகளில் விநியோகிக்கப்படும் அலுவலர் ஆள் அடையாள அட்டை விடயத்தில் கொள்ளை இலாப செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது விடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் திங்கட்கிழமை 10.06.2019 வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயங்களை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணத்திலுள்ள வலய கல்வித் திணைக்களங்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாடசாலைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெருந்தொகைப் பணம் அறவிடப்பட்டுள்ள நிலையில் அலுவலர் அடையாள அட்டை விநியோகிப்பதற்கு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களிடம் இருந்து மாறுபட்ட தொகைகளில் பணம் அறவிடப்படுவதாக அறியக் கிடைத்துள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு கல்வி வலயத்தில் அமைந்துள்ள பிரபல தேசிய பாடசாலையில் ஆசிரியர்களிடம் இருந்து புகைப்படத்துடன் ரூபாய் 200 அறவிடப்பட்டுள்ள நிலையில், அதே கல்வி வலயத்திலுள்ள சில தேசிய பாடசாலைகளில் புகைப்படத்துடன் ரூபாய் 300 தொடக்கம் ரூபாய் 350 வரை அறவிடப்பட்டுள்ளது.

மேலும் பல மாகாணப் பாடசாலைகளில் சம தராதரத்துடன் ஒரே நிறுவனத்தில் அச்சிடப்படும் இத்திணைக்கள அடையாள அட்டைகள் ரூபாய் 300 தொடக்கம் ரூபாய் 350 வரை அறவிடப்படுவதாக அறிய வந்துள்ளது.

திணைக்கள அடையாள அட்டை விநியோகம் தொடர்பாக நிதிப்பிரமாணம் சட்ட விதிகளுக்கு அமைவான விலைமனு கோரப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை சமீபத்திய பாதுகாப்பு அச்சுறுத்தல் நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு சகல அலுவலர்களும், உத்தியோகத்தர்களும் தங்களது அலுவலர் அடையாள அட்டையையும் தேசிய ஆளடையாள அட்டைக்கு நிகராக வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கத்தினால் எந்தவிதான சுற்று நிருபங்களும் அனுப்பப்பட்டிருக்காத நிலையில் இத்தகைய நிதி வசூலிப்புக்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் நடைபெற்ற பரீட்சை குழறுபடிகளில் பல்வேறு நிதி மோசடிகள் கண்டறியப்பட்டிருந்தன.

இம் மேசடிகள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்விச் செயலாளர் மாகாண கணக்காய்வாளர் ஆகியோரிடம் நேரில் சென்று முறைப்பாடு செய்தலை தொடர்ந்து பல்வேறான விசாரணைகள் நடைபெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார். 

SHARE

Author: verified_user

0 Comments: