16 Jun 2019

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தவும் முன்னாள் முதலமைச்சர் வலியுறுத்து

SHARE
நாட்டில் தற்போது தொடர்ந்து நீடித்து வரும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை நீக்க உடனே நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
 நாட்டின் சமகால அரசியல் தளம்பல் நிலை தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை 16.06.2019 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போது தோன்றியுள்ள விடயங்களுக்குத் தீர்வுகாண மக்கள் அரங்குக்குச் செல்வதே முக்கியமானதாகும். எனவே, அரசு நாடாளுமன்றத்தைக் கலைத்துத் பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.

அதற்கும் முடியாவிட்டால். விகிதசாரத் தேர்தல் முறைமையின்படி மாகாண சபைத் தேர்தலையாவது நடத்தி மக்களின் நிருவாகத்தை நடாத்த வழிவகை செய்ய வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றைத் தாக்கல் செய்து நிறைவேற்றுவதன் மூலமாக இரண்டு வாரங்களில் தேர்தலுக்குச் செல்ல முடியும்.

இப்பொழுது நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஜனநாயக முறைமையிலான மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு தேர்தல்கள் காலதாமதப்படுத்தப்படுவதாகும்.

தற்போது நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பங்குச் சந்தை பாரிய பின்னடைவைக் கண்டு வருகின்றது. இந்தநிலை தொடருமானால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரும் இந்தநிலையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.

பொருளாதார இழப்பால் மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ள வழியில்லாததால் தலைநகரில் ஒரு பெண் தனது குழந்தைகளுடன் ஓடும் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கே அவமானமாகும்.
இனவாதிகளான தலைமைகள் எவரும் இந்த நிலைமகளைச் சீர்தூக்கிப் பார்க்க மாட்டார்கள்.

எந்தத் தேர்தலும் எந்த சந்தர்ப்பத்திலும் வரலாம் என்கின்ற தளம்பல் நிலையில்தான்  நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இனி தேர்தலை நோக்கி நகர்வதைத் தவிர அரசியல் தலைமைகளுக்கு வேறு தெரிவு இல்லை.

அது மாகாண சபைத் தேர்தலாகவோ, பொதுத் தேர்தலாகவோ, ஜனாதிபதித் தேர்தலாகவோ இருக்கலாம்.

இதுவரை காலமும் நாங்கள் நம்பியிருந்த அரசியல் தலைமைகள் சாதித்தவைகளைப் பற்றி மக்கள் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

எவ்வாறாயினும் மக்கள் ஏமாற்று அரசியலில் இருந்து விடுபட வேண்டும். புதிய போக்கில் சிந்திக்க வேண்டும். இது தனியே சிறுபான்மை பெருமான்மை தமிழ் முஸ்லிம் சிங்களம் என்றில்லாமல் நாட்டு நன்மை கருதி பொது நோக்கில் பொதுத் தளத்தில் நின்று சிந்திக்க வேண்டும்.

இந்த ஏமாற்று அரசியலை தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதற்கு இனிமேல் மக்கள் அனுமதிக்கக் கூடாது.

உ;புச் சப்பில்லாத ஏமாற்று அரசியல் செய்து 25, 30 வருடங்களைக் கழித்து விட்டு  நாட்டுமக்களின் வாழ்வைச் சீரழித்த இனவாத சிந்தனையாளர்களுக்கு இனி ஒரு துளியும் இடமளிக்காத சிந்தனைப் போக்கை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒட்டு மொத்த இந்த நாட்டுக்கும் நாட்டின் பல்லின சமூகங்களுக்கும் தொடர்ந்தும் துரோகத்தையே செய்து வரும் இனவாத அரசியல் வெறியர்களை எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் படுதோல்வி காணச் செய்ய வேண்டும்.

எல்லாவகையிலும் பாதிக்கப்பட்டுப்போயுள்ள ஒட்டு மொத்த நாட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபடக் கூடிய சேவையாளர்களை இனம்காண மக்கள் தவறி விடக் கூடாது.
பாதிக்கப்படும் எந்த சமூகத்துக்காகவும் உரிய இடங்களில் தக்க தருணத்தில் குரல் கொடுக்கக் கூடிய இனவாதமற்ற  சமூகக் காவலர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த நாட்டில் இனங்கள் பிரிந்து இருப்பதையும் இழந்து சமூகப் பாதுகாபப்பு, அரசியல் உத்தரவாதம், உரிமைகள், இருப்பு என்பனவற்றை இழக்க வேண்டியேற்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: