26 May 2019

நடந்த வெறுக்கத்தக்க சம்பவங்களை தொடர்ந்து மெருகூட்டிப் பேசி பேசி நோயாளிகளாக மாற வேண்டிய தேவைப்பாடு இல்லை. தென்னிந்திய திருச்சபையின் கிழக்குப் பிராந்திய குரு முதல்வர் அடிகளார் ஏ.எஸ். ரூபன்

SHARE
நடந்த வெறுக்கத்தக்க தாக்குதல்களை தொடர்ந்தும் மெருகூட்டிப் பேசிப் பேசி நோயாளிகளாக மாற வேண்டிய தேவைப்பாடு இல்லை என தென்னிந்திய திருச்சபையின் கிழக்குப் பிராந்திய குரு முதல்வர் அடிகளார் ஏ.எஸ். ரூபன் தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைந்த சர்வமத சமாதான நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் சனிக்கிழமை  25.05.2019 இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன, திட்ட அலுவலர் கிங்ஸ்லி ராஜசிங்கம்,  உட்பட  மட்டக்களப்பு மாவட்ட சமாதானப் பேரவை உறுப்பினர்களும், பௌத்த. இந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ, கத்தோலிக்கரல்லாத, சமயங்களின் சமயத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்ட அவர்,
சமாதானத்தை உருவாக்குகின்றவர்கள் பாக்கியவான்கள் வன்முறையைத் உருவாக்குகின்றவர்கள் துரதிருஷ்டசாலிகள்.

ஆகவே, சமாதானத்தை உருவாக்குன்ற பாக்கியவான்களுக்கிடையில் துரதிருஷ்டவாதிகள் இருக்க முடியாது.

பாக்கியவான்களுக்கான பாக்கியமான  சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் கிடைக்கப்பெற்றும் விடுவதில்லை.

அதேபோல தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையில் உள்ள நாங்களும் சமாதானத்துக்கான கதவுகளைத் திறந்து அதற்காகப் பரப்புரை செய்து பாடுபட வேண்டும்.

நடந்து முடிந்த கொடூரமான சம்பவங்களை நினைவூட்டி மெருகூட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் அது மேலும் மேலும் வன்மங்களைத் தூண்டத்தான் வழி கோலும்.

சமாதான உடன்படிக்கையான பொறுப்பை நாம் கொண்டிருக்க வேண்டும்.
இஸ்லாம்,‪ பௌத்தம், ஹிந்து, கிறிஸ்தவம், சீக்கியம் போன்ற இன்னும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற மதங்களை நான் கற்பிக்கும் ஒருவர் என்ற வகையில் இஸ்லாத்தைப் பற்றியும் அல்குர் ஆனைப் பற்றியும் எனக்குச் சிறந்த புரிதல் இருக்கின்றது.

இஸ்லாத்தின் பார்வையில் மனிதருள் ஷைத்தான்களாக வாழ்வோரை எக்காரணம் கொண்டும் அடக்க முடியாது.

அதேவேளை இஸ்லாத்திலே ஒற்றுமைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்ற உயரிய விழுமிங்கள் இருக்கின்றன. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.

கடந்த 30 வருட காலம் எல்ரீரீஈ இருந்த காலத்தில் நாட்டில் இடம்பெற்ற செயற்பாடுகளும் அரசாங்கத்திற்கும் மற்றைய எல்லோருக்கும் நன்கு தெரியும்.

போராட்டத்திற்காக உருவான பல இயக்கங்கள் இருந்தாலும் ஒரேயொரு இயக்கம் மாத்திரம்தான் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தங்களுடைய சமூகத்திற்குள்ளேயே கொல்லப்பட்ட வரலாறுகள் நமக்குத் தெரியும்.

மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத வகையில் மாற்றுக் கருத்துக் கொண்ட வேறு அமைப்புக்களும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று சொந்த இனத்தையே அழித்த சம்பவங்கள் ஏராளம் இருக்கின்றன.
அதேவேளை பள்ளிவாசலில் புகுந்தும் படுகொலைகள் நடத்தப்பட்டன.

சமீபத்திய அசம்பாவிதங்களை எடுத்துக் கொண்டால் தீவிரவாத சம்பவங்கள் இடம்பெறப்போகின்றதென்று இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுத் துறைக்கு இந்த விடயங்கள் நன்றாகத் தெரியும்.

அதனை அரசியல் சாயம் பூசுவதற்குப் பயன்படுத்தவே அரசியல் உயர்மட்டத்தில் உள்ளோர் எண்ணினார்கள்.

அரசியல் மயப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு இப்படியொன்று நடைபெற வேண்டும் என்பது தேவையாக இருந்தது.

அதனால்தான் அவர்கள் இதனைப் பாரதூரமாக எடுக்கவில்லை.

தீவரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் பாதுகாப்பை வழங்குகின்றோம் என்று கூறி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி விட்டு கடந்த ஒரு மாதகாலமாக என்ன நடந்தது என்பதை நாடே அறியும்.

எனவே, இவற்றையெல்லாம் நாங்கள் பகுத்தாராய்ந்து பார்த்து அடி மட்டத்தில் சமூக ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் இனங்கள் மதங்கள் என்ற அடிப்படையில் பிளவுபட்டு விடாது அரசியல் சூழ்ச்சிகளுக்கும் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கும் இடமளிக்காது அமைதிக்காகப் பாடுபட வேண்டும்” என்றார்.






SHARE

Author: verified_user

0 Comments: