27 May 2019

தொண்டர்களை அணிதிரளுமாறு கோரிக்கை இ.செ.சங்கத்தின் மட்டு.மாவட்ட தலைவர் வசந்தராசா

SHARE
இலங்கையில் முப்பது வருடகால ஆயுத யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிறுபான்மை மக்களின் முக்கிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருந்து வருகின்ற போதிலும், இலங்கை மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய ஒரு சூழ்நிலை கடந்த பத்து வருடங்களாக நிலவி வந்திருந்தது. 
ஆனால் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்திலே யாரும் எதிர்பார்க்காத நிலையிலே கற்பனைகூட பண்ணியிருக்காத அளவுக்கு கத்தோலிக்க கிறிஸ்த்தவ ஆலயங்களிலும் உல்லாசப் பயணிகள் தங்கும் ஆடம்பர விடுதிகளிலும் தற்கொலைக் குண்டுதாரிகளின் மனித வெடிகுண்டுகள் வெடித்தன. 

என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் தம்பிப்போடி வசந்தராசா தெரிவித்துள்ளார். இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் ஈராண்டுக்கான பொதுச் சபைக்கூட்டம் மட்டக்களப்பு மன்ரேசா வீதியில் அமைந்துள்ள இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை தாங்கி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்……

இதனால் 250 இற்கு மேற்பட்ட அப்பாவிக் குடிமக்கள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். 500 இற்கும் அதிகமான குடிமக்கள்  காயங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இன்னும் சிலர் வைத்தியசாலைகளிலே இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அனேகர் உளத்தாக்கத்துக்கு உட்பட்ட நிலையில் நடைப்பிணங்களாக வாழ்ந்து வருகின்றனர்

இக்குண்டு வெடிப்புக்களுக்கு ஐஸ்.ஐஸ் என்ற உலக தீவிரவாதிகள் உரிமை கொண்டாடியுள்ளனர். இதன் அர்த்தம் இலங்கை நாட்டுக்குள் ஐஸ்.ஐஸ் தீவிரவாதம் உருவாகியுள்ளது என்பதுதான். இது மிகவும் அபாயகரமானது. உலகமே இவர்களைக் கண்டு அஞ்சுகிறது. நமது நாட்டிலும் இப்போது எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது

இந்த நிலமையிலே இன மத சாதி மொழி வேறுபாடின்றி பாதிக்கப்படுகின்ற மக்களின் துன்ப துயரங்களை போக்கும் மனிதாபிமான பணியைச் செய்ய வேண்டியது செஞ்சிலுவை இயக்கத்தின் தலையாய கடமையாகும்.

கடந்த யுத்த காலத்திலே விடுதலைப் போராளிகளுக்கும் ஆயுதப்படைகளுக்கும்; இடையிலே ஏற்பட்ட திடீர் திடீர் துப்பாக்கிச் சண்டைகளின் போதும், திடீர் திடீர் வெடிப்புச் சம்பவங்களின் போதும் இடையில் அகப்பட்டு காயப்பட்ட சாதாரண குடிமக்களுக்கான முதலுதவிச் சிகிச்சைகளை துணிவோடும் அக்கறையோடும் செய்து அவர்களை வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் சென்று அவர்களது உயிர்களைக் காப்பாற்றிய அனுபவம் நமது தொண்டர்களுக்கு உண்டு. 

அதே போன்று அத்தகைய சம்பவங்களின்போது சகலதையும் இழந்து அதாவது உற்றார் உறவினர்களை இழந்து உடமைகளை இழந்து சொந்த இருப்பிடங்களை இழந்து உள்நாட்டிலே  இடம் பெயர்ந்து பரிதவித்த மக்களை ஓடிச் சென்று பராமரித்த அனுபவம் செஞ்சிலுவைத் தொண்டர்களுக்கு உண்டு. 

காயப்பட் குடிமக்களை வைத்தியசாலைக்கும் இறந்து போனவர்களை மீண்டும் அவர்களது உறவினர்களுக்கும் எடுத்துச் சென்று ஒப்படைத்த அனுபவம் செஞ்சிலுவைத் தொண்டர்களுக்கு உண்டு.

அந்த நேரத்திலே அரச நிறுவனங்களினாலும் ஏனைய நிறுவனங்களினாலும் பாதிக்கப்பட்ட இடங்களை அடையவோ அங்குள்ள மக்களுக்கான அவசரத் தேவைகளை உடன் மேற்கொள்ளவோ முடியாமலிருந்தது. அப்போது செஞ்சிலுவை இயக்கமே தமது தொண்டர்களுடன் அத்தகைய இடங்களை அடைந்து உரிய அவசர நேர உதவிகளையும் அவசர நிவாரண பணிகளையும் மேற்கொண்டிருந்தது.

1995 ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஐந்தாம் தேதி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பிலே தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இருசாராருக்குமிடையிலே கடுமையான துப்பாக்கிச் சமர் இடம் பெற்றது.  

அத்தருணத்திலே கல்முனையிலிருந்து குடிமக்களை ஏற்றி மட்டக்களப்பை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று அத்துப்பாக்கிச் சமரினுள் அகப்பட்டுக் கொண்டது.  அதில் பிரயாணம் செய்து கொண்டிருந்த  அப்பாவி பொதுமக்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக அவர்களது உற்றார் உறவினர்கள் பதறித் திரிந்தார்கள்.

சம்பவ இடத்திற்கு சென்று நடந்ததை அறிந்து சொல்வதற்கு எந்த ஒரு நிறுவனமோ எந்த ஒரு அதிகாரியோ  துணியாத அந்த சந்தர்ப்பத்திலே எந்தக் கொடுப்பனவும் இன்றி எந்த விளம்பரமும் இன்றி செயற்பட்டு வருகின்ற செஞ்சிலுவைத் தொண்டர்களே அவ்விடம் சென்றிருந்தார்கள். அங்கே சென்று நிலமையை அறிந்தது மட்டுமல்லாமல் அங்கே உயிர் துறந்த நிலையில் இருந்த நாற்பது பொது மக்களின் உடல்களையும் வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்தவர்கள் செஞ்சிலுவைத் தொண்டர்களேயாகும்.

இவ்வாறு எத்தனையோ பணிகளை செஞ்சிலுவைத் தொண்டர்கள் 1990 ஆம் ஆண்டிலிருந்து ஆயுதப் போர் முடிவுறும் வரையில் செய்து வந்திருந்தார்கள்.

கடந்த முப்பது வருடகால யுத்தத்தின்போது செஞ்சிலுவை இயக்கம் எவ்வாறு மனித பணிகளை நடுநிலை நின்று வேறுபாடின்றி சுதந்திரமாக துணிவாக மேற்கொண்டதோ அதே போன்று எதிர்காலத்திலும் செயற்பட எம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். அமைதியாக ஆடம்பரமின்றி விளம்பரமின்றி இவ்வளவு காலமும் எவ்வாறு செயற்பட்டோமோ அவ்வாறே மீண்டும் நாம் செயற்படவேண்டிய காலம் ஒன்று உருவாகியுள்ளதாக தெரிகிறது.

யுத்த காலத்திலே செயற்பட்டதைப் போன்ற எதிர்காலத்திலேயும் செயற்படுவதற்காக   இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையானது புதிய தொண்டர் அணி ஒன்றினை உருவாக்குவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது. 

எனவே அனுபவம் உள்ள செஞ்சிலுவைத் தொண்டர்கள், மனிதாபிமான பணியை மேற்கொள்ள ஆசைப்படும் தொண்டர்கள் மட்டக்களப்பு மாவட்ட செஞ்சிலுவை சங்கக் கிளையில் இணைந்து கொள்ளுமாறு கிளை நிர்வாகக் குழு உங்களை வேண்டிக் கொள்கின்றது. என அவர் இதன்போது தெரிவித்தார்.























SHARE

Author: verified_user

0 Comments: