26 May 2019

மட்டக்களப்பில் தீவிரவாத குண்டுத் தாக்குதலால் படுகாயமடைந்தவர்களுக்கு பண உதவி

SHARE
மட்டக்களப்பிலுள்ள சீயோன் தேவாலயத்தில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற  தீவிரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்தோரில் தெரிவு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு பராமரிப்புக்கான பண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைந்த சர்வமத சமாதான நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் சனிக்கிழமை  25.05.2019 இடம்பெற்றபோதே இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன, திட்ட அலுவலர் கிங்ஸ்லி ராஜசிங்கம்,  உட்பட  மட்டக்களப்பு மாவட்ட சமாதானப் பேரவை உறுப்பினர்களும், பௌத்த. இந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ, கத்தோலிக்கரல்லாத, சமயங்களின் சமயத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த ஏப்ரில்  21ஆம் திகதி ‪ இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின்போது படுகாயமடைந்த நிலையில் தற்போது வரை தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோரிலும் அவயவங்கள் பாதிக்கப்பட்டோரிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு முதற்கட்டமாக இந்தப் பராமரிப்புப் பண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாதிப்புக்களின் தீவிரத் தன்மையைப் பொறுத்து 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரையிலான பண உதவிகளை பயனாளிகள் பெற்றுக் கொண்டனர்.

மீதமாக இன்னுமுள்ள ஒரு சில பாதிக்கப்பபட்டோருக்கு  இவ்வுதவிகள் வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் மனோகரன் மேலும் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: