5 May 2019

2009 இற்கு முன்னைய களநிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்திருந்தால். அதன் விளைவுகளை ஐஎஸ் அமைப்பும், அதன் வழிகாட்டிகளும் உணர்ந்திருப்பார்கள் - கிழக்கு மாகாணசபையின் முன்னாள்; பிரதித் தவிசாளர் - இந்திரகுமார் பிரசன்னா.

SHARE
2009 இற்கு முன்னைய களநிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்திருந்தால். அதன் விளைவுகளை ஐஎஸ் அமைப்பும், அதன் வழிகாட்டிகளும் உணர்ந்திருப்பார்கள் - கிழக்கு மாகாணசபையின் முன்னாள்; பிரதித் தவிசாளர் - இந்திரகுமார் பிரசன்னா. 
குண்டு வெடிப்புடனான தொடர்புகள் பற்றிய குற்றச்சாட்டு ஒரு தமிழ் அரசியல்வாதி மீது இருந்திருந்தால் இந்நேரம் அவர் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றிருக்கும். இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் யாராக இருப்பினும் அவர்கள் இந்த நாட்டை ஆள்வதற்காகவே இருக்கின்றார்களே தவிர மக்களைப் பாதுகாப்பதற்காக இல்லை என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.
 
2009 இற்கு முன்னிருந்த களநிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்திருந்தால். அதன் விளைவுகளை ஐஎஸ்,ஐஎஸ் அமைப்பும், அதன் வழிகாட்டிகளும் உணர்ந்திருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
 
ஞாயிற்றுக்கிழமை (05.05.2019) மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்களின் 33 வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
 
எமது தலைவர்கள் நல்ல நோக்கமும், தூய சிந்தனைகளுடனும் எங்களை வளர்த்தவர்கள். அதே போல் நாங்களும் எமது மக்களுக்கு நல்ல சிந்தனைகளைத் தான் சொல்லுவோம். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி எமது மக்கள் கோரமாகக் கொல்லப்பட்ட நாள்;. உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் எமது மக்கள் மீது படுமோசமான மிருகத்தனமான படுகொலைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
 
உண்மையில் இந்தப் படுகொலைகளைச் செய்வதற்கு முழுக் காரணமாக இருப்பவர்கள் இந்த நாட்டில் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பின் ஏஜென்ஸ்ஸிகளாக இருக்கும் சில அரசியற் தலைமைகள். இவ்வாறான அரசியற் தலைமைகளை வளர்த்தெடுத்தது இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சியை நடத்திய அரசாங்கங்கள். அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகவும் இருக்கலாம், ஐக்கிய தேசியக் கட்சியாகவும் இருக்கலாம்.
 
இந்த நாட்டில் மூன்று அரச கரும மொழிகள் இருக்கின்றன என்று சொல்லுகின்றார்கள். ஆனால் காத்தான்குடியிலே அவர்களது வரவேற்புப் பலகையில் அரபு மொழியை உட்புகுத்தி இருக்கின்றார்கள். இதனை இந்த நாட்டு அரசாங்கங்களும் தட்டிக் கேட்கவில்லை. அரபு நாட்டில் இருந்து பல நிதிகள் வருகின்றது அதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்று அவர்கள் பார்க்கின்றார்களே தவிர அந்த நிதிகள் தவறுகள் பலவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதைப் பார்க்கின்றார்கள் இல்லை.
 
எமது தேசிய விடுதலைப் போராட்டம் எமது மக்களுக்காக அவர்களின் உரிமைக்காக மேற்கொள்ளப்பட்டது. அது 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டதன் பின்னர் எங்கள் மத்தியில் மனிதகுண்டுகளை ஏவியிருக்கின்றார்கள். 2009 இற்கு முன்னிருந்த களநிலையில் இந்த சம்பவம் நடந்திருந்தால். அதன் விளைவுகளை ஐஎஸ் ஐஎஸ் அமைப்பும், அதன் வழிகாட்டிகளும் உணர்ந்திருப்பார்கள்.
 
கிழக்கு ஆளுநரின் ஒப்புதல் வாக்குமூலம் போன்ற காணொளி மும்முரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதனை இந்த நாட்டின் அரசாங்கமும், பாதுகாப்புத்துறையும் செவிமடுத்ததாகத் தெரியவில்லை. தங்களின் தேர்தல் காலத்திற்காக அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஓட்டமாவடியில் காணிகள் அபகரிக்கப்பட்டது, இந்துக் கோயில் அழிக்கப்பட்டது, இரத்த ஆறு ஓடும் என்று கூறிய பல்வேறு விடயங்கள் அந்தக் காணொளிகளில் உள்ளன.
 
இவற்றையெல்லாம் கவனிக்காத இந்த அரசாங்கங்கள் எவ்வாறு எங்கள் தமிழ் மக்கள் மீது கரிசனை கொள்ளும். விடுதலைப் புலிகளை இப்போது புகழ்கின்றார்கள். ஆனால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியற் கைதிகளை விடுதலை செய்ய முடியவில்லை. வவுணதீவில் நடந்த சம்பவத்திற்கு முழுக் காரணத்தையும் எமது முன்னாள் போராளிகள் மீதே திணித்தார்கள். அதன் உண்மை தற்போது வெளிவந்துள்ளது. அவரை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளத் தாமதிக்கின்றார்கள்.
 
இந்த நாட்டில் தமிழர்கள் மீது பாராமுகமாகவே அனைத்து அரசாங்கமும் இருக்கின்றன. இவ்வாறான பாடுகொலைக் குற்றச்சாட்டுகள் ஒரு தமிழ் அரசியல் தலைவர்கள் மீது இருந்திருந்தால் இன்றைக்கு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றிருக்கும். இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் யாராக இருப்பினும் அவர்கள் இந்த நாட்டை ஆள்வதற்காகவே இருக்கின்றார்களே தவிர மக்களைப் பாதுகாப்பதற்காக இல்லை.
 
இவ்வாறான மிலேச்சத்தனமான சம்பவங்கள் தொடருமாக இருந்தால் எங்களுடைய மக்களை நாங்களே பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். எமது நாட்டின் அரசாங்கம், ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அரசியல்வாதிகள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் எமது விடுதலைக்காகப் போராடியவர்களே தவிர மதத்திற்காக அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: