21 Apr 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அரச செலவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.ஒரு இலட்சம் கொடுப்பனவு.

SHARE
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அரச செலவில் நல்லடக்கம் செய்வதற்கு அனர்த்தம் முகாமைத்துவ மத்திய நிலையம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 3.00 மணியளவில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் …. ஞாயிற்றுக் கிழமை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சம்பவமானது கவலையளிக்கின்றது. இவ்வாறு இறந்தவர்களின் உடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் இணைங்கியுள்ளதுடன் தலா ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 60,000 ரூபாவும், இரண்டாம் கட்டமாக 40,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

இவ் அனர்த்தங்களால் 14 குழந்தைகளும், 7 பெண்களும், 5 ஆண்களுடன் 26 பேரின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலநறுவையில் இருந்து விஷேட வைத்தியகுழு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்து சிசிச்சை அளிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பின் நகரையும், தேவாலயங்களையும், பாதுகாப்பதற்கும் மற்றும் தனியார் கல்விநிலையங்கள், பஸ்தரிப்பு நிலையங்கள், புகையிரத நிலையங்கள், பொதுமக்கள் ஒன்றும் கூடும் நிலையங்களில் விஷேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள், இளைஞர், யுவதிகள் மதத்தலைவர்கள் அனாவசியமாக பொது வைபவங்களில் தவிர்த்துக் கொள்ளுமாறும், மாவட்டத்தில் நடைபெறும் வைபவங்கள், கலைநிகழ்வுகள், தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

இவ்வனர்த்தத்தில் சிக்குண்ட ஒருவரை கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் சிசிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு போதியளவு மருந்துப்பொருட்கள் வைத்தியசாலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றது. இவ்வாறானவர்களுக்கு இரத்தம் பாய்ச்சுவதற்கு காத்தான்குடி, வாழைச்சேனை வைத்தியசாலைகளில் போதியளவு இரத்தம் சேமிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயமாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அமைச்சர்களான எம்.எஸ்.எம்அமீரலி, அலிசாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மாதிபர் கபில ஜெயசேகர, கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி, மற்றும் மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் ஆகியோர்கள் மாவட்ட செயலகத்தில் விஷேட தீர்மானத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: