31 Jan 2019

மட்டக்களப்பில் மோதல் மாற்றத்திற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கத் திட்டம் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா

SHARE
மட்டக்களப்பில்  மோதல் மாற்றத்திற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கத் திட்டம் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா
 “மோதல் மாற்றத்திற்கான தற்போதைய பல்நோக்குச் செயற்பாடுகளை மேலும் பலப்படுத்தல்” "Consolidating Ongoing Multi-level Partnership Actions for Conflict Transformation  எனும் தொனிப்பொருளிலமைந்த செயற் திட்டத்தை மட்டக்களப்பில்   வெகு விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பாக புதன்கிழமை 30.013.2019 கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற இன யுத்தம் முடிவடைந்து ஆண்டுகள் ஒன்பது கடந்துள்ள போதும் யுத்தத்தினால் உருவாக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

யுத்தத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த பல குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன. குடும்பத்தலைவர்கள் இல்லாமல் போனதினால் அக்கடும்ப அங்கத்தவர்களின் வாழ்க்கை நிலை குறித்து பல்வேறுபட்ட சிக்கல்கள் தோன்றியுள்ளன.

காணாமற்போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பான அவர்களின் வாழ்க்கை நிலையை உறுதிப்படுத்துவதே பிரதானமான பிரச்சினையாக உள்ளது.
அவ்வாறே  அநாதையாக உள்ள குழந்தைகள், பெண்கள் பலதரப்பட்ட அசௌகரியங்களுக்கு உட்படும் வாய்ப்பும் காணப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல் யுத்தத்தினால் தெற்கிலும் ஏற்பட்ட பொருளாதார சமூகப் பாதிப்புக்களை கணக்கிட முடியாது.

விசேடமாக நமது நாட்டில் வாழும் பல்லின மக்கிளிடத்தில் கடந்த காலங்களில் வளர்ச்சியடைந்த அவநம்பிக்கை சந்தேகம் பயம் விரோதம் போன்றவை இன்னும் முற்றாக இல்லாமலாக்கப்படவில்லை.

இந்த விவகாரலங்களில் உரையாற்றுவதற்கான ஒரு திட்டவட்டமான நடவடிக்கை மூலம் மோதல் மாற்றத்திற்கான தற்போதைய பல்நோக்கு செயற்பாடுகளை மேலும் பலப்படுத்தல் எனும் செயற்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பிப்பதற்காக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன் அறிமுகம், நோக்கம், முடிவு என்பனவற்றை இனம்கண்டு முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் முதற்கட்டமாக இடம்பெறும்.

இலங்கை  தேசிய சமாதானப் பேரவையினால் இலங்கையில் 16 மாவட்டங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மாவட்ட சர்வமத செயற்பாட்டுக் குழுக்களின் நடவடிக்கையானது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சமுதாயத்தில் நிலவும் சிறிய அளவிலான இன மத மோதல்களையும் பல்வேறு வகையான பிரச்சினைகளையும் தீர்க்கவும் அல்லது குறைப்பதற்கும் முயற்சி எடுப்பதாக உள்ளது.

தேசிய சமாதானப் பேரவையினால் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட சர்வமத செயற்பாட்டுக் குழுக்கள் 2010ஆம் தொடக்கம் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன.

இதில் மதத் தலைவர்கள் சமூகத்தில் பல்வேறு துறையில் உள்ள துறைசார்ந்தவர்களும் இணைந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப ஒன்றுபட்டுச் செயற்பட்டு வருகின்றனர்.

சிவில் சமூகம் பலம் பெற வேண்டும் என்பதற்காக தேசிய சமாதானப் பேரவை பல்வேறு அனுசரணைகளை வழங்கி சிவில் சமூகத்தைக் கட்டியெழுப்பி வந்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

SHARE

Author: verified_user

0 Comments: