27 Jan 2019

கூட்டிணைந்த சகவாழ்வினாலேயே போதைப் பொருள் அழிவிலிருந்து எதிர்கால சந்ததியைக் காப்பாற்ற முடியும் மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன்.

SHARE
கூட்டிணைந்த சகவாழ்வினாலேயே போதைப் பொருள் அழிவிலிருந்து எதிர்கால சந்ததியைக் காப்பாற்ற முடியும் மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன்.
இனங்களிடையே நல்லிணக்கம், சகவாழ்வு விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு என்பவை  காணப்படுமானால் போதைப்பொருள் பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க முடியும் என மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் போதையற்ற நாடு எனும் தொனிப்பொருளினாலான தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு புளியந்தீவு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் அதன் பயனாளிகளுக்கான போதைப் பொருட்களின் பாவனையால் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு சனிக்கிழமை 26.01.2019 புளியந்தீவு தெற்கு கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

புளியந்தீவு சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் கே. நவரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு மாநகரசபை உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்...

அரசு போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு படையணிகள் மற்றும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் மூலம் செயற்திட்டங்களை அமுல்படுத்தியபோதிலும் தலைநகரிலிருந்து கிராமப்புறம் வரை போதைப் பொருட்களின் பாவனையும் அதைச் சந்தைப்படுத்தலும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக போதைப் பொருட் பாவனை பல்வேறு வடிவங்களில் மாணவர்கள் உள்ளிட்ட சகல தரப்பாரிடமும் வியாபித்துள்ளது  கவலையளிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம், கஞ்சா மற்றும் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களின் பாவனை என்பன அதிகரித்துள்ளதால் இம்மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

2008ஆம் ஆண்டின்  மதுவரி கட்டளைச்சட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி மாவட்டத்தின் சனத்தொகைப் பரம்பலுக்கேற்ப 28 மதுபானசாலைகள் மட்டும் தான் அமைந்திருக்க வேண்டும் ஆனால் மாவட்டத்தில் தற்போது நூற்றிக்கு மேற்பட்ட மதுபானசாலைகள் உள்ள நிலையில் மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் மட்டும் 32 மதுபானசாலைகள் அமைந்துள்ளன.

அண்மையில் எமது மாநகர சபையின் அமர்வின்போது பிரேரணை ஒன்றை முன்வைத்து  மாநகரசபையின் சனத்தொகைச் செறிவு, சமூக சம்பந்தமான தேவை மற்றும் பாவனை முறைமை என்பனவற்றை கருத்தில் கொண்டு இனிமேல் மாநகரசபைப் பிரிவினுள் மதுபானசாலைகளை நிர்மாணிப்பதற்கான அனுமதிகள் வழங்குவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் அடிமட்ட மக்களோடு பழகும் பக்குவத்துடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சமூர்த்திப் பயனாளிகளாகிய நீங்கள் உங்களது உதிரம் தோய்ந்த உழைப்பானது உங்களது குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் போதைப் பொருள் பாவனைக்காக வீண்விரயம் செய்யும் செயற்பாட்டை முற்றாகக் கட்டப்படுத்துவீர்களானால் உங்களது வறுமை நீங்குவதோடு எது மாவட்டமும் பொருளாதாரத்தில் எழுற்சி பெறும்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: