5 Dec 2018

மக்கள் மனதில் இடம்பிடித்த கலைஞர்களையே தேர்வு செய்ய வேண்டும் கலைஞர் எஸ். வி பத்மசிறி

SHARE
மக்கள் மனதில் இடம்பிடித்த கலைஞர்களையே கலைஞர் கௌரவத்திற்காகத் தேர்வு செய்து கௌரவம் வழங்க வேண்டும் என மட்டக்களப்பைச் சேர்ந்த வானொலிக் கலைஞரும் கிழக்கு மாகாண தல வரலாற்றுப் பாடகருமான எஸ். வி பத்மசிறி தெரிவித்தார்.
அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களினால் நடாத்தப்பட்டுவரும் கலை விழாக்கள், கலைஞர் கௌரவிப்பு தொடர்பாக அவர் புதன்கிழமை 05.12.2018 தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது, 
இப்பொழுதெல்லாம் எமது நாட்டில் பல்வேறு கோணங்களில் கலை விழாக்களும் கலைஞர்கள்  கௌரவிப்பும்  ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன.

இது உண்மையில் வரவேற்கத்தக்க ஒரு உயிரோட்டமான நிகழ்வுகள்தான்.
கலைஞர்களை வாழும்போதே வாழ்த்த வேண்டும் என்று கலைஞரும் மும்மொழி வித்தகரும் நேரடி வர்ணனையாளரும் அமைச்சராகவும் இருந்த காலஞ்சென்ற ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் கூறி அதனைத் தொடங்கியும் வைத்தார். இதில் அர்த்தம் இருக்கிறது.

இருப்பினும் தற்போதெல்லாம் கலைவிழாக்களை நடாத்துபவர்கள்,  கலைஞர்கள் கௌரவிப்பு என்று வருகின்றபொழுது இந்த நாட்டிற்கும் தத்தமது பிரதேசங்களுக்கும் பெருமை தேடித்தந்த கலைஞர்களை கண்டுகொள்ளாதது மனதுக்கு வேதனை அளிக்கிறது.
கலைஞர் கௌரவத்திற்காக தெரிவு செய்யப்படும் கலைஞர்கள்  மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களாகவும் அவர்களது படைப்பாக்கம் மக்களினால் ரசிக்கபடவும் வேண்டும்.

அப்பேர்ப்பட்ட கலைஞர்களை இனம் கண்டு அவர்களுக்கான கௌரவம் வழங்கப்பட வேண்டும்
புள்ளிகள் இடுவதன் மூலம் ஒரு கலைஞனை மட்டிட முடியாது மாறாக அவர் தான்சார்ந்த பிரதேசத்திற்கு ஆற்றிய கலைத் தொண்டின் தாற்பரியம் என்ன, அவரது கலை முதிர்ச்சி யின் கனதி, அவரது சேவையின் விசாலத் தன்மை,   என்பவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்தபின்பே கலைஞர் கௌரவம் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் இன்று நிலமை அவ்வாறில்லை காலத்துக்கேற்றாற்போல் கலைஞர் கௌரவமும் கலைவிழாக்களும் நடந்தேறுகிறது.

பல கலைஞர்கள் மேடை நிகழ்வுகளை அலங்கரிக்கும் ஒரு காட்சிப் பொம்மைகளாகவே செயற்பட்டு அந்நிகழ்வு நிறைவு பெற்றதும் அந்நிகழ்வுடன் அவர்களை மறந்து விடுகின்ற நிலைமையையே காணக்கூடியதாகவுள்ளது.

முற்காலத்தில் மன்னர்கள்  கலைஞர்களை சபைக்கு வரவழைத்து அவர்களது பெயரில் சொத்துக்களை எழுதிவைத்து கலை வளர்த்த காலம் ஒன்றிருந்தது.

இன்று கலைஞர்களை தெரிவு செய்வதிலும் அவர்களைப் பாராட்டுவதற்கும் சாதி சமயம் சம்பிரதாயங்கள் பலருக்கு குறுக்கே நிற்பதை அவதானிக்க முடிகிறது.
இந்நிலை மாற வேண்டும். கலை என்பது மனிதனுக்கு இன்பத்தை மிகுவிப்பதாகும். இவ் இன்பத்தை நல்கும் கலைஞர்கள் மிருதுவானவர்கள் பிரத்தியேகமானவர்கள் என்பதை புரிந்துகொண்டு கலை விழாக்கள் நடாத்தப்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: