8 Dec 2018

குழந்தைகளுடைய படைப்பாற்றல்களை, ஆளுமைகளை சிறுவயதிலேயே சிதைப்பதற்கு பெற்றோர்களே காரணமாக அமைந்துவிடுவது பெருமளவில் நடைபெற்றுவருகின்றது.

SHARE
குழந்தைகளுடைய படைப்பாற்றல்களை, ஆளுமைகளை சிறுவயதிலேயே சிதைப்பதற்கு பெற்றோர்களே காரணமாக அமைந்துவிடுவது பெருமளவில் நடைபெற்றுவருகின்றது.
குழந்தைகளுடைய படைப்பாற்றல்களை, ஆளுமைகளை சிறுவயதிலேயே சிதைப்பதற்கு பெற்றோர்களே காரணமாக அமைந்துவிடுவது பெருமளவில் நடைபெற்றுவருகின்றது. இவ்வாறு வெள்ளிக்கிழமை (07) ஹட்டன் கிட்டீஸ்  சிறுவர் பாடசாலையின் (முத்துவிழா) முப்பதாவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்த இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் தெரிவித்தார். 

கிட்டீஸ் சிறுவர் பாடசாலையின் அதிபர் மல்லிகா பிரதாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதில் பரிசில்களை வழங்கிவைத்து உரையாற்றிய நாரா.டி.அருண்காந்த் தொடர்ந்தும் தெரிவித்ததாவது…

மனிதர்களுடைய மூளை அபரிதமான ஆற்றல்களைக் கொண்டது. அதன் வளர்ச்சி பெரும்பாலும் தாயின் கருவரையில் நிகழ்ந்துவிடுகின்றது. பிறப்பின்பின் மூளையின் ஆற்றல் வெளிப்பாடு நிகழ்கின்றது. புதிது புதிதாக விடயங்களை உருவாக்குகின்றது. ரசனை மேடைகளை உருவாக்குகின்றது. மனிதனை உணர்திரன்மிக்க, உணர்வுமிக்க படைப்பாளியாக உருவாக்க முனைகின்றது. இதன் வெளிப்பாட்டை சிறுவர்களின் நடவடிக்கைகளில் காணலாம். இடவசதிகளற்ற வீடமைப்பைக் கொண்ட எமது  மக்கள் குழந்தைகளின் செயற்பாடுகளை, விளையாட்டுக்களை தடுக்கின்றனர். இதைச்செய், இதை செய்யாதே" என்று எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக குழந்தைகள் பெற்றோரின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு செயற்படவேண்டியவராக மாற்றப்படுகின்றனர். இதன் மூலம் குழந்தைகளின் மூளையின் சுயாதீன படைப்பாற்றல் , இயக்கம் போன்றவை பாரிய அளவில் முடக்கப்படுகின்றது.

தரம் ஐந்துவரை குழந்தைகளை ரோபோக்கள் போன்று வளர்த்துவருகின்றனர். பெற்றோரே அவர்களது குழந்தைகளின் பேராற்றல் வெளிப்பாட்டிற்கு எதிரியாக மாறிவிடுகின்றனர். இது அவர்கள் அறியாமலேயே நடைபெறுகின்றது. எனினும் குழந்தைகள் வளர்ந்து பருவ வயதை அடைந்தவுடன் அவர்களை கண்காணிப்பதற்கு பெற்றோர்கள் தவறிவிடுகின்றனர். உண்மையிலேயே குழந்தைகள் கட்டிளமைப் பருவத்தை அடையும்போதுதான் பெற்றோர்களுடைய கண்காணிப்பு ,ஆலோசனை அரவணைப்பு அவர்களுக்கு அதிகம் தேவைப்படுகின்றது. எனினும் என் பையன் வளர்ந்துவிட்டான் இனி அவனாகவே அவனுடைய வேலைகளை செய்துகொள்வான் என்று அவனை பெற்றோர்கள் கௌரவமாக கைவிட்டுவிடுகின்றனர். இங்கேதான்  பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றது. மாணவர்கள் யாரோடு பழகுகின்றார்கள். எங்கெங்கு செல்கின்றார்கள், என்னென்ன கெட்ட பழக்கங்களை பழகுகின்றார்கள் என்பது பெற்றோருக்கு தெரியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றது. சமீபத்தில் மாத்தறையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பிரத்தியேக வகுப்பிற்குச் செல்லும் வழியில் வீதியில் வைத்து சண்டையிட்டுக்கொண்டார்கள். அதில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமானார். ஆக தனது பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போது அவர்களது சுயாதீனத்தையும் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கவும் குழந்தை பெரியவனான பின்பு அவனை அரவணைத்து கண்காணித்து அவனை ஊக்கப்படுத்தவும் பெற்றோர் தவறுவதன் விளைவு மனித மிருகங்களையும் இயந்திரத்தன்மையான சமுதாயத்தையும் உருவாக்கிவருகின்றோம்.

எமது சமுதாயம் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே குருகுலக்கல்வியினூடாக மிகச்சிறந்த மனிதர்களையும்  மாகான்களையும் , அறிஞர்களையும் படைப்பாளிகளையும் உலகிற்கு தந்துள்ளது. சானக்கியன், சசுருதர், ஆரியபட்டர், கணிதமேதை ராமன், திருவள்ளுவர், வான்மீகி, கம்பர், ஒளவையார், என்று ஆயிரக்கணக்கில் தொடரும் எம்மின அறிஞர்களின் பட்டியல். இவர்கள் எந்த பல்கலைகழகங்களின் அடையாளம்? இவர்கள் அனைவருமே இவர்களது பெற்றோர்களின் வழிகாட்டலில் உருவான அறிஞர்கள் கிடையாது. ஆனால் பெற்றோரின் அரவணைப்பில் இவர்களாகவே தம்மை இவ்வுலகிற்கு யாரென்று வெளிப்படுத்தினார்கள். இதைப்பார்த்து பொறாமைப்பட்ட மேற்குலகம் மெக்கல்லே கல்வித்திட்டம் எனும் உப்புசப்பற்ற ஏட்டுச்சுறக்காய் கல்வித்திட்டத்தை எம்மீது திணித்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எமது அறிவியல் மேற்கத்தேய வாதிகளால் திருடப்பட்டுவிட்டது. எஞ்சியவை சூறையாடப்பட்டுவிட்டது. உலகின் மிகப்பழமையானதும் உலகின் முதலாவது பல்கலைக்கழகமும் எமது முன்னோர்களாலேயே உருவாக்கப்பட்டு அறிவுமனம் பரப்பப்பட்டது.எது எப்படியோ தற்போது  மனனம் செய்து ஒப்புவிக்கும் இக்கல்வித்திட்டம் எமது மக்களை ஏட்டுச்சுறக்காய்களாக்கி விட்டிருக்கின்றது.

எமது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் இவைகளை புறந்தள்ளிய கல்வியானது இன்று பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று போற்றிய ஆத்திச்சூடியையும்,  எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற அற்புதமான பொன்மொழியையும் பாடத்திட்டத்தில் இருந்து அகற்றிய தமிழ்நாடு அரசாங்கம் அதற்கான பெரிய விளையை தற்போது கொடுத்து வருகின்றது. வகுப்பறையில் வைத்தே ஆசிரியர்களை மாணவர்கள் வெட்டிக்கொல்லும் சம்பவங்களும் ,தனது தாயை பணம் தரவில்லை என்ற காரணத்திற்காக மகன்மாரே கழுத்தறுத்து கொலை செய்யும் சம்பவங்களையும் தமிழ்நாடு அடிக்கடி சந்தித்து வருகின்றது. ஆகவே குழந்தைகளை மனிதத்தன்மையுள்ள படைப்பாளிகளாகவும் அறிஞர்களாகவும் உருவாக்குவது பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்றார்.





SHARE

Author: verified_user

0 Comments: