25 Dec 2018

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு

SHARE

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பின் பல இடங்களில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.அந்தவகையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்திலும் இந்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் திருவுருவப் படத்திற்கு பிரதம அதிதி மலர் மாலை அணிவித்ததோடு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன் மற்றும் பிரதேச, மாநகரசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையின்போது மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுதொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த மூன்று வருடமாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: