25 Nov 2018

சிசிரிவி மூலம் பணம் பறிக்கும் திருடன் சிக்கினான்

SHARE
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மிக சாதுரியமாக பணம் பறிக்கும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரை சிசிரிவி காணொளிக் கமெராவின் உதவியுடன் தாம் ஞாயிற்றுக்கிழமை 25.11.2018 கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவம் இடம்பெற்ற இடங்களை அண்டியுள்ள சிசிரிவி கமெராக் காட்சிகளைப் பரிசீலித்ததன் மூலம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் அவ்வப்போது மோட்டார் சைக்கிளிலும் சைக்கிளிலும் தனது வசதிக்கேற்றாற்போல பயணம் செய்து பணப்பறிப்பில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்திருப்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சிசிரிவி கமெராவில் பதிவாகியிருந்த இலக்கத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேக நபர் திருட்டில் ஈடுபட முன்னர்; சிலவேளைகளில் தன்னை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் என்றும் சிலபோது பிரதேச அரசியல்வாதிகளின் இணைப்பாளர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு மக்களிடம் நெருங்கிப் பழகி தனது கைவரிசையைக் காட்டியுள்ளார் என்று பொதுமக்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரால் ஏமாற்றப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பலர் பொலிஸ் நிலையம் சென்று குறித்த நபரின் அடையாளங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர் சமீபத்தில் பார்வைத் தெளிவில்லாத ஒரு ஏழை வயோதிப மீன் வியாபாரியிடமிருந்து 2100 அபகரித்துச் சென்றுள்ளதும், வீட்டில் தனியாகவிருந்த ஒரு வயோதிபத் தாயின் வீட்டுக்கு சென்று, தான் ஒரு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எனகூறி, வீடு வளவ துப்புரவாகப் பராமரிக்கப்படவில்லை, தண்டம் அறவிடப் போகின்றேன்   என்று அச்சுறுத்தி அந்த மூதாட்டியிடம் 1500 ரூபாய் கேட்டுள்ளார், அந்த மூதாட்டி தன்னிடமிருந்து 5000 ரூபாவைக் கொண்டு வந்து கொடுத்து மீதியைத் தருமாறு கூறியதும் அந்த நோட்டை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிய விடயமும் பணம் பறிகொடுத்தவர்களால் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமளிக்கப்பட்டுள்ளது.

பணம் பறிகொடுத்த இன்னும் பலர் ஏறாவூர் பொலிஸ் நிலையம் சென்று குறித்த சந்தேக நபரைப் பற்றிய திருட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: