15 Nov 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய வெள்ள நிலைமையின்போது சுமார் 1 இலட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் நெல் மற்றும் உப உணவுச் செய்கை பாதிப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய வெள்ள நிலைமையின்போது சுமார் 1 இலட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் நெல் மற்றும் உப உணவுச் செய்கை பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் சுமார் 1 இலட்சத்து 13 ஆயிரம் 687 ஏக்கர் நெல் மற்றும் உப உணவுச் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளம் பரவிக் கொண்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 1 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ஏக்கர் (45000 ஹெக்ரேயர்) பரப்பளவில் செய்கை பண்ணப்பட்ட நெற் செய்கை பாதிக்கப்பட்டிருப்பது மதிப்பிடப்பட்டது.

அதேவேளை, வெள்ள நிலைமை இருந்த சந்தர்ப்பத்தில் மறுவயல் உப உணவுப்  பயிர்ச் செய்கையும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக சோளம், நிலக்கடலை உட்பட பயறு கௌபி என்பனவும் இன்னும் சில உப உணவுப் பயிர்களுமாக சுமார் 1187 ஏக்கர் (475 ஹெக்ரேயர்) செய்கை சராசரியாக 50 வீதமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மறுவயற் செய்கைப் பாடவிதான உத்தியோகத்தர் என். கணேசமூர்த்தி தெரிவித்தார்.

பாதிப்புக்குள்ளான இந்தப் பயிர்ச் செய்கைகள் யாவும் சுமார் ஒரு மாத வளர்ச்சி நிலையை அடைந்திருந்தவை என்று விவசாயிகள்  தெரிவிக்கின்றனர்.

தமக்கேற்பட்ட இழப்புக்கள் பற்றிய துல்லியமான விவரங்களை தற்போது விவசாயிகள்  அதிகாரிகளிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

பல விவசாயிகள் அழிவடைந்த தமது நிலத்தில் மீள் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வருவதாக கட்டுமுறிவு விவசாயிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.

சமீப சில நாட்களாக நீடித்த அடைமழையும் பெருவெள்ளமும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இழப்புக்களை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: