19 Jun 2018

மங்களகமவில் 900 குடும்பங்கள் சுத்தமான குடிநீரின்மையால் பாதிப்பு சிறுநீரகப் பாதிப்பால் குடும்பங்கள் செயலிழப்பதாகத் தெரிவிப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள்ளடங்கும் மங்களகம, கெவுளியாமடு, புளுகுணாவ, கோமகஸ்தலாவ ஆகிய கிராமங்களிலுள்ள சுமார் 900 குடும்பங்கள் சுத்தமான குடிநீரின்றி பல்வேறு உடல் உபாதைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தமது கிராமங்கள் பல்வேறு வகையில் பின்னடைவுகளை எதிர்கொண்டு வருவதாகவும் அதுபற்றி கரிசனை கொள்ளுமாறும் குறிப்பாக தமக்கு அத்தியாவசியத் தேவையாகவுள்ள சுத்தமான குடிநீரைப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறும் கிராம மக்கள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமதைக் கேட்டுள்ளனர்.

இது விடயமாக ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஆர்.பி. சுனில் பண்டார தலைமையிலான சிவில் சமூகப் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை 12.06.2018 கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஏறாவூர் அலுவலகத்திற்கு வருகை தந்து தமது கிராமத்தின் குறைபாடுகளை எடுத்துக் கூறினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப் புறத்திலுள்ள தூரக் கிராமங்களான மங்களகம கிராம சேவகர் பிரிவிலும் ஏனைய கிராமங்களிலும் மிகவும் வறிய நிலையிலுள்ள சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள்.
எதுவித அபிவிருத்தியுமின்றி ஒதுக்குப்புறக் கிராமங்களாக இவை பின்தள்ளப்பட்ட நிலையிலுள்ளன.

இங்கு குடிநீர்ப் பிரச்சினை மிகவும் அத்தியாவசியத் தேவையாக உள்ளது.
சுத்தமான குடிநீர் வசதி இல்லாததால் பல குடும்பங்கள் சிறுநீரகப் பாதிப்பிற்கும், ஏனைய உடல் நலக் கோளாறுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள்.
குடும்பத்தின் பிரதான உழைப்பாளி பாதிக்கப்படுமிடத்து ஒட்டுமொத்த அந்தக் குடும்பமுமே வறுமையில் வாடவேண்டியுள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமாக விவசாயி ஒருவர் சுத்தமற்ற குடிநீரைப் பருகியதால் சீறு நீரகப் பாதிப்புக்கு உள்ளானார். அவரது சகோதரர் சிறு நீரகமொன்றைக் கொடுத்து பாதிக்கப்பட்டவருக்கு உதவினார்.

பின்னர் அதேகுடும்பத்தில் மனைவியும். இரு பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். பிள்ளைகள் சிறந்த கல்வி கற்று வந்த நிலையில் அவர்களது கல்வியிலும் பாதிப்பேற்பட்டுள்ளது. இப்பொழுது அந்த ஒட்டுமொத்தக் குடும்பமுமே உடல் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளது.

குழாய்நீர்  விநியோகத்திற்கான வேலைகள் கடந்த 3 வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் இடம்பெற்று வந்த நிலையில் இப்பொழுது மிக நீண்டகாலமாக அந்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனவே இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு சேவைகள் சென்றடையவேண்டிய மங்களகம பகுதி ஒதுக்குப்புறக் கிராம சிங்கள மக்களுக்கு அதியாவசியத் Nவையான குடிநீரைப் பெற்றுத் தருமாறும் அதன் பின்னர் குடியிருப்பு வசதிகள், வாழ்வாதார உதவிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். என்று வேண்டுகோள் விடுத்த அவர்கள்,  காட்டு யானைகளின் இடையறாத தொல்லைகளுக்கும் கிராமவாசிகள் முகங்கொடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ஹக்கீமின் ஒத்துழைப்புடன்  குறிப்பாக குடிநீர்ப் பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத் மங்களகம கிராம பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: