5 Jul 2016

கிழக்கின் இளைஞர் முன்னணியின்கல்விக் கருத்தரங்கு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தினை படியுயர்த்தும் நோக்கில் கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் (பிரதிப்பணிப்பாளர், தேசிய மொழிக் கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவகம்) திட்மிடலில் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட படுவான்கரை பிரதேசத்தில் காணப்படும்
திக்கோடை, மண்டூர், தும்பங்கேணி,வெல்லாவெளி, கணேசபுரம் போன்ற  பிரதேச பாடசாலைகளில் (க.பொ.த)சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களினை ஒன்றிணைத்து மட்-பட்-வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் மாதாந்த கருத்தரங்கின் நான்காம் தொடர் கடந்த மாதம் இடம்பெற்றிருந்தது. 


கருத்தரங்கு சம்பந்தமாக முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் மாணவர்களிடம் கருத்து தெரிவிக்கையில் எமது கிழக்கின் இளைஞர் முன்னணியினால் ஒழுங்குபடுத்தப்பட்டு கடந்த சித்திரை மாதம் ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் நான்காம் தொடரினை எட்டியிருக்கும் இவ் இலவசக் கருத்தரங்கிற்கு நீங்கள் வருகை தந்திருக்கின்றீர்கள். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிற்கும் நான் பயணம் செய்தபொழுது நான் உணர்ந்த விடயம் எமது மாணவர்கள் பூரணமான கல்வி வளத்தினை பெறுவதற்கு பெரிதும் அல்லலுறுகின்றனர்.  பொரளாதாரம்,போக்குவரத்து,மேலதிக வகுப்பு வசதிகள் போன்றவற்றில் பல தடைகளினை கொண்டிருக்கின்றனர். 

குறிப்பாக படுவான்கரை பிரதேசத்தில் பெரிதும் இப்பிரச்சினைகளை என்னால் அவதானிக்க கூடியதாக இருந்தது. எனவே இவ்வாறான தடைகளை நீக்கி எமது தமிழ் சமூகத்தினையும் கல்வியில் தரம் உயர்த்துவதன் மூலம் முன்னேற்றும் நோக்கத்தில் எம்மால் இக் கருத்தரங்குகள் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தி கொண்டு வருகின்றோம். மாணவர்கள் இக்கருத்தரங்கு சம்பந்தமாக வழங்கிய கருத்துக்களை நான் பார்த்திருந்தேன். நீங்கள் கூறிய கருத்திலிருந்து இவ் கருத்தரங்குகள் உங்களிற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது என்பதனை என்னால் உணரக் கூடியதாக இருந்தது. உங்களின் வேண்டுகோளிற்கிணங்க இம்மாதம் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களும் உள்ளடங்கலாக கருத்தரங்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றும் மாணவர்களாகிய நீங்கள் கல்வி மாத்திரம் அல்லாது உங்கள் மத்தியில் தலைமைத்துவம் போன்ற பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்த்துக் கொண்டால் மாத்திரமே நீங்களும் நாளை இவ் உலகில் சிறந்த மனிதர்களாக திகளவேண்டும். உங்களிடம் இருக்கும் தயக்கங்கள், கூச்சசுபாகம், மேடைக்கூச்சம் போன்றவற்றை களைந்தெறிந்து ஆக்கபூர்வமான எதனையும் தயக்கம் இன்றி செய்யக்கூடியவர்களாக மாறவேண்டும். மாணவர்களாகிய உங்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளினை. அதனை அடைவதற்கு இக்கருத்தரங்குகளினை சரியான முறையில் பயன்படுத்துவீர்கள் என நம்புகின்றேன். 

எமது பிரதேசங்களில் காணப்படும் சிறந்த ஆசிரியர் வளங்களை ஒன்றிணைத்து உங்கள் பிரதேசங்களிற்கு வருகை தந்து  சேவை வழங்குகின்றோம்.  "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" எனும் பழமொழிக்கு அமைய சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்துவீர்கள் என நம்புகின்றேன் எனக் கூறியிருந்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: