25 Jul 2016

கடமையின்போது அச்சுறுத்தல் வருமாயின் கிராம சேவையாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்-மட்டக்களப்பு ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத் தலைவர் எஸ். ஞானசிறி

SHARE
அரசாங்க நிருவாக சக்கரத்தின் அடிமட்டத்தில் இருக்கின்ற மிக முக்கியமான சேவையாளர்கள் என்கின்ற வகையில் ஒவ்வொரு கிராம சேவகரினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத் தலைவர் எஸ். ஞானசிறி கேட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக திங்களன்று (ஜுலை 25. 2016) கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கிராம சேவகர்கள் பல்வேறு நிருவாகப் பொறுப்புக்களைச் சுமந்த வண்ணம் 24 மணி நேரமும் இயங்குகின்ற அரச நிருவாகச் சக்கரத்தின் அதி முக்கியமான அடிமட்ட நிருவாகிகளாவர்.
ஆயினும், கிராம சேவையாளர்கள் சுமந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புக்கள் காரணமாக அவர்கள் தமது கடமைகளின் போது பல்வேறு சவால்களையும் உயிரச்சுறுத்தல்களையும், ஆபத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சமீப காலங்களுக்குள்ளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர் படு கொலை செய்யப்பட்டதும், தாக்கப்பட்டதும், பழி சுமத்தப்பட்டதும், அவமானப்படுத்தப்பட்டதுமான பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இது குறித்து நாம் பாதுகாப்புக்குப் பொறுப்பான உயரதிகாரி என்கின்ற வகையில் மட்டக்களப்பு  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடுவதற்கு உள்ளோம்.

நிருவாகத்திற்குப் பொறுப்பான மாவட்ட உயரதிகாரி என்கின்ற வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் வெகுவிரைவில் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறியுள்ளார்.

கிராம சேவகர்கள் பல கடமைகளை செய்ய வேண்டும் என்று அரசு பணித்துள்ளது.
தமக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள கடமைகளை சரிவரச் செய்து முடிக்க முற்படுகின்றபோது அந்தக் கடமையை நிறைவேற்ற விடாது பல சந்தர்ப்பங்களில் கிராம சேவகர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள், அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள், இழப்புக்களைச் சந்திக்க வேண்டியும் வந்துள்ளது.

எனவே. கிராம உத்தியோகத்தர்கள் அரசினால் பணிக்கப்பட்ட தங்களது கடமையை சரிவரச் செய்ய முற்படுகின்றபோது ஏற்படுத்தப்படுகின்ற தடைகள், இடைஞ்சல்கள், அச்சுறுத்தல்கள், என்பவை பற்றி  பொலிஸாரின் பாதுகாப்பைப் பெற வேண்டியது அவசியமாகின்றது.

ஓந்தாச்சிமடம் கிராமசேவகரான சோமசுந்தரம் விக்னேஸ்வரன் சிலமாதங்களுக்கு முன்னர் தனது கடமை நேரத்தில் அடித்துக் கொல்லப்பட்டார்.

கிரான் பிரதேச செலயகப் பிரிவில் கடமையாற்றும் சண்முகம் குரு எனும் கிராம சேவகர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மரக்கடத்தல் சம்பவமொன்றைத் தடுக்க முற்பட்டபோது கடமை நேரத்தில் தாக்கப்பட்டுள்ளார்.

எனவே, இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தால் கிராம சேவகர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடமை புரிவது இயலாமலாகி விடும்.

ஒரு கிராம சேவையாளர் தனக்கு கடமை புரிவதில் யாரேனும் நபரிடமிருந்தோ குழுக்களிடமிருந்தோ அச்சுறுத்தல் இருக்கிறது என அறிவித்து அது பற்றி பொலிஸாரின் உதவியை நாடும்பட்சத்தில் அந்த கிராம சேவகருக்கு பொலிஸ் பாதுகாப்பு காலம் தாழ்த்தாது உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.

மேலும், கிராம உத்தியோகத்தர்கள் ஏதேனும் கடமை அலுவல் நிமித்தம் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது அங்கு அவர்கள் சாதாரண பொதுமக்கள் போல் நடத்தப்படாமலும், நீண்ட நேரம் தாமதித்திருக்கச் செய்யாமலும் விரைவாக அவர்களது அலுவல்களை முடித்து அனுப்பி வைக்க வேண்டும்.

இப்படியான கோரிக்கைகளை நாம் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முன்வைக்கவுள்ளோம்.” என்றார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 385 கிராம சேவகர் கடமைப் பிரிவுகள் உள்ளன.

SHARE

Author: verified_user

0 Comments: