12 Jun 2016

மாற்றுத் திறனாளிகளை வளமூட்டுவதில் மேலைத்தேசம் மேல்நோக்கிச் சென்று விட்டது கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம்.

SHARE
மாற்றுத் திறனாளிகளை வளமூட்டுவதில் மேலைத்தேசம் மேல்நோக்கிச் சென்று விட்டது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை  (ஜுன் 10, 2016) மாற்றுத் திறனாளிகளுக்காக இடம்பெற்ற ‘நிமிர்ந்து நில்’ விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாகவும் இயற்கையாகவும் வலது குறைந்த பலர் இந்த விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய துரைராஜசிங்கம் மேலும்  கூறியதாவது,
தமிழ்த் தலைவர் எம். சிவசிதம்பரம் ஐயா அவர்கள் தேசியப்பட்டியலிலே தெரிவு செய்யப்பட்டு சக்கர நாற்காலியிலேதான் நாடாளுமன்றம் சென்றார். அப்பொழுது சிலர் இவருக்கு இது தேவைதானா என்று கேட்டார்கள்.

அதற்கு ‘நான் கைகளாலும் கால்களாலும் சிந்திப்பதில்லை நான் மூளையாலே சிந்திக்கின்றேன்’ என்று கேள்வி கேட்டவர்களுக்கு அவர் தக்க பதிலளித்தார். இதனால் அவர்கள் வாயடைத்துப் போய் நின்றார்கள்.
எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது போல இந்த நாடாளுமன்றத்தில் எனது சிரசைப் பாவித்து சிந்தனைகளை வெளிப்படுத்துவேன் ஆகையினால் நடக்க முடியாமலுள்ளது எனது சிந்தனையோட்டத்திற்கு ஒரு குறைபாடல்ல என்றாரவர்.

அவ்வாறே மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் அவர்களும் சிறந்த புத்தி ஜீவிகளாகவும் மேதைகளாகவும் இருந்திருப்பதை நாம் வரலாறு நெடுகிலும் காண்கின்றோம்.

விழிப்புலன் அற்றவர்கள் படிப்பதற்கான பிறைலர் எழுத்துரு கண்டு பிடிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் அமெரிக்க வரலாற்றில் பெரும் பதவி வகித்த ஹெலென் ஹெல்லர் என்று  நாங்கள் அறிகின்றோம். இத்தனைக்கும் அவர் ஒரு மாற்றுத் திறனாளி.

மாற்றுத் திறனாளிகளை அரவணைத்து ஆர்வமூட்டுவதனூடாக அவர்களையும் இந்த நாட்டின் வளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதன் மூலம், குடும்பம், சமூகம் நாடு என்று அதன் அபிவிருத்தி நன்மைகள் வியாபித்து நிற்கும்.
நம்மை விட மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கமும் உதவி ஒத்தாசையும் வழங்கி அவர்களது ஆற்றல்களை மென்மேலும் வளர்த்தெடுப்பதிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மனிதாபிமானத்தைக் காண்பிப்பதிலும் மேற்கத்தேய உலகம் பலபடிகள் மேல்நோக்கிச் சென்று விட்டார்கள்.

துரதிருஸ்டவசமாக நமது நாட்டிலே மனிதாபிமானத்தின் பெறுமதி புரியாதவர்களாக நாமெல்லோரும் நடமாடுகின்றோம்.

2009 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலிலே முடிவடைந்த அந்தக் கொடூர யுத்தத்தில் இந்த நாட்டின் மிகப் பெறுமதி மிக்க வளங்களான மனித உயிர்கள் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டு முடங்கச் செய்யப்பட்டார்கள்.

குட்டிமணி மற்றும் ஜெகனின் தீர்ப்பு வாசிக்கப்படுவதற்கு முன்னர் இந்த வழக்கை அவதானித்த பொழுது உங்களிடமுள்ள திறமைகளையெல்லாம் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தத் திறமைகளெல்லாம் நல்ல செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்குமென்றால்  அது இந்த நாட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருந்திருக்கும் என்று சொல்லி முடித்ததற்குப் பின்னர்தான் நீதிபதியவர்கள் தீர்ப்பை வாசித்தார்கள்.
இந்த மேற்கோளின் மூலம் அந்த நீதிபதி இந்த நாட்டு ஆட்சியாளர்களுக்கு இந்த நாட்டு மக்கள் அனைவரும் இன மத மொழி வேறுபாடுகளுக்கப்பால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு சொத்து என்ற ஒரு நல்ல சேதியைச் சொல்லியிருந்தார்கள்.

அப்படிப்பட்ட அரும்பெரும் வளமான இந்த நாட்டுப் பிரஜைகளை அரசு ஒரு சொத்தாக மதிக்க வேண்டும். அப்பொழுது அழிவுகளையும் அiதியின்மையையும் தூரப்படுத்தி விட்டு அபிவிருத்தி நோக்கிப் பயணி;க்கலாம்.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு என்கின்ற அந்த மாபெரும் நிறுவனம் எந்த மக்களிடமிருந்து வரிப்பணத்தை அறவிட்டதோ அதில் இன மத மொழிப் பாகுபாடு காட்டாது அந்த மக்களின் நலனில் அக்கறை கொண்டு இயங்க வேண்டும். இதுவே ஆக்கபூர்வமான அபிவிருத்திக்கும் அமைதிக்கும் வழிவகுக்கும். என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: