30 Sept 2026

சாத்வீகப் போராட்டம் ஜனநாயக ஆட்சியினரால் மதிக்கப்பட வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்- சிறிநேசன்.

SHARE

சாத்வீகப் போராட்டம் ஜனநாயக ஆட்சியினரால் மதிக்கப்பட வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்- சிறிநேசன்.

ஜனநாயக நாடுகளில் சாத்வீகப் போராட்டம் ஆட்சியாளர்களால் மதிக்கப்பட வேண்டும். அவ்வாறு மதிக்கப்படுகின்ற போது மக்களும் ஜனநாயகத்தின் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை கொள்வார்கள். சாத்வீகம் என்பது தம்மை ஒறுத்து அல்லது தம்மை வருத்தி சமூக நலனுக்காக போராட வழி காட்டுகின்றது.  

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை(30.09.2026) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. 

இந்தியாவில் அந்நிய ஆங்கிலேயரின் ஆட்சியை எதிர்த்த காந்தியடிகளார் தனது போராட்ட வழியாக சாத்வீகத்தைத் தேர்த்து எடுத்தார். மக்களை அவ்வழியில் அணிதிரட்டி வெற்றியும் பெற்றார். அதன் மூலம் இந்தியா சுதந்ரமும் பெற்றது.

ஆயுதப் போராளியான திலீபன் இந்தியாவிடம் தமிழர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து தனது உயிரை நீத்தார். காந்திய தேசத்துக்கு காந்திய வழியைக் கொண்டு போராடி உயிர் விட்டார். அவர் உயிர்நீத்து 39 ஆண்டுகள் கடந்துள்ளது. ஆனால், ஈழத்த மிழர்கள் திலீபனை ஒவ்வொரு ஆண்டும் நினைவில் ஏந்தி அஞ்சலி செலுத்துகின்றார்கள். அந்த அஞ்சலி நிகழ்வை ராஜபக்ச அதிகார தரப்பினர் பல தடவைகள் ஒடுக்கியுள்ளனர். 

ரணில், மைத்திரி அநுர அரசாங்கங்கள் இந்த அஞசலிகளை குழப்ப நினைக்கவில்லை. ஆனால் இம்முறை யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த திலீபன்  அவர்களது 39 ஆவது நினைவேந்தலுக்கான உருவச்சிலை யினை பொலிசார் அகற்றியதன் மூலமாக சாத்வீகப் போராட்டத்திற்கு எதிரிடையான போக்கினை வெளிக்காட்டியுள்ளனர். இதனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் அதிருப்தி அடைவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான எதிர்ப்பு தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிவில் அமைப்புகளாலும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களாலும் வெளிக்காட்டப்பட்டுள்ளன. 

சமத்துவ அரசுக்காகப் போராடியதாகப் பேசப்படுகின்ற, போராளிகளாக இருந்து ஜனநாயக பாதைக்கு வந்த ஜே.வி.பி அரசாங்கம், ஆயுதப்போராளியாக இருந்து சாத்வீகப் போராளியாக உயிர்த்தியாகம் செய்த திலீபன் அவர்களின் போராட்டத்தை மதிப்பார்களா, இல்லையா? என்பது தான் தமிழர்களின் ஜனநாயகக் கேள்வியாகும். இனிவரும் காலம் தேசிய மக்கள் சக்தியினரின் போக்கில்தான் அதற்கான விடை தெரிய வரும். வாக்களித்த மக்கள் விடைக்காக எதிர்பார்த்து நிற்கிறார்கள். என அவர் அதில் தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: