3 Aug 2026

நாட்டில் அதிகூடிய வெப்பநிலை நிலவிய மட்டக்களப்பில் 4 மாதங்களுக்குப் பின்னர் பலத்த மழை. அனல் வெப்பக் காலநிலை தணிந்தது.

SHARE

நாட்டில் அதிகூடிய வெப்பநிலை நிலவிய மட்டக்களப்பில் 4 மாதங்களுக்குப் பின்னர் பலத்த மழை. அனல் வெப்பக் காலநிலை தணிந்தது.

கடந்த 4 மாதங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு 02.08.2026 இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது.

திங்கள் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 47.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றதாக மட்டக்களப்பு வானிலை அவதானிப்பு நிலையம் தகவல் தெரிவித்தது. 

மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான மட்டக்களப்பில் 47.8 மில்லி மீற்றர், உறுகாமத்தில் 71.0  மில்லி மீற்றர், நவகிரி பிரதேசத்தில் 62.0 மில்லி மீற்றர், உன்னிச்சையில் 50.8 மில்லி மீற்றர், தும்பங்கேணியில் 40.0 மில்லி மீற்றர், பாசிக்குடாவில் 14.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், இதுதவிர குறைந்த மழைவீழ்ச்சியாக  கட்டு முறிவு பிரதேசத்தில் 3.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரியில் 7.2 மில்லி மீற்றர்,  மழை விழ்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தகவல் தெரிவித்தது.

இதேவேளை மழை பெய்யத் துவங்கிய ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிவரை நாட்டில் அதிகூடிய வெப்பநிலையாக மட்டக்களப்பில் 37.2 பாகை செல்சியஸ்  நிலவியது பதிவாகியிருந்தது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் சிறிதளவு மழை பெய்ததற்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவுதான் மழை பெய்துள்ளது. சுமார் 2 மணிநேரம் பெய்த மழையின் காரணமாக மட்டக்களப்பில் உணரப்பட்ட உஷ்ணம் தணிந்துள்ளது. அத்துடன் கிணறுகள், குளங்கள், ஆறுகளிலும் வாவியிலும் ஏனைய  நீர் நிலைகளிலும் ஓரளவுக்கு நீர் தேங்கியுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தாங்க முடியாத அளவுக்கு தகிக்கும் வெப்பத்துடன், பலத்த அனல் காற்று நிலவிய நிலையில் இந்த கன  மழைபெய்துள்ளமை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் மிகுந்த ஆறுதலளிப்பதாக இருந்தது. 

இதுவரை நாட்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய அனல் வெப்பக் காலநிலையால் மக்களின் நடமாட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தன. கட்டிட நிருமாணத் தொழில் செய்வோர், திறந்த வெளிகளில் தொழில்களில் ஈடுபடுவோர், விவசாயிகள், மீனவர்கள், மைதானங்களில் விளையாட்டில் ஈடுபடுவோர்  பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். கடலில் மீன்பிடியும் கணிசமாகக் குறைந்திருந்தது.

மேலும், பலமாக வீசி வந்த அனல் வெப்பக் காற்று  குப்பை மேடுகளைப் புரட்டிப் போட்டதோடு விவசாயப் பயிர்கள், மரங்களின் இலைகள், கிளைகளையும் பெயர்த்து விட்டிருந்தது. 

வீடுவாசல்களில், கிணறுகளில், நீர் நிலைகளில் தூசுகளும், குப்பைகளும், புழுதியும் படியும் சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. தகரங்களாலான அடைப்புகள், வீடுகள், கொட்டில்களை பலத்த அனல் வெப்பக் காற்று தகர்த்தெறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.



 

SHARE

Author: verified_user

0 Comments: